2018-04-27 16:12:00

சிரியாவில் ஏறத்தாழ ஐம்பது இலட்சம் சிறார்க்கு கல்வி வாய்ப்பு


ஏப்.27,2018. சிரியாவில் ஏழு ஆண்டுகளுக்குமேல் சண்டை, வன்முறை மற்றும் புலம்பெயர்தல் இடம்பெற்றுவந்தாலும், ஏறத்தாழ ஐம்பது இலட்சம் சிறார் கல்வி வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்று, யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது.

பெருமளவான நன்கொடையாளர்கள், சிரியாவுக்கு உதவும் அரசுகள் மற்றும் குழுக்களின் தாராளமான உதவிகள், அயராது உழைக்கும் வீரத்துவ ஆசிரியர்கள், சிரியா நாட்டுச் சிறார் மற்றும் குடும்பங்களின் மனஉறுதி போன்றவையே, இலட்சக்கணக்கான சிறார் கல்வி வாய்ப்பைப் பெற காரணமாகியுள்ளன என்று யுனிசெப் கூறியுள்ளது.

கல்வி வாய்ப்புப் பெற்றுள்ள சிறாரில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர், சிரியாவிலும், அண்டை நாடுகளிலும் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனர் எனவும், லெபனான் மற்றும் ஜோர்டனில், சிரியா நாட்டுச் சிறார், அவர்களையொத்த வயதினருடன் அரசுப் பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் எனவும், யூனிசெப் கூறியது.

பிரசல்லஸ் நகரில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கிற்கு முன்னதாக, அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப், சிறாரின் கல்விக்கு மேலும் ஆதரவுகள் அவசியம் எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சிரியாவில் ஏழு ஆண்டுகளுக்குமேல் இடம்பெற்றுவரும் சண்டையில், 28 இலட்சம் சிறார், கல்வி வாய்ப்பை இழந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.