2018-04-28 16:34:00

இந்துத்துவ கருத்தியல்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்


ஏப்.28,2018. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் வருகிற மாதத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள், அம்மாநில மக்களின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் மட்டுமல்ல, இந்திய அரசியல் அமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள, அனைத்துக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் நிலைபெறுவதற்கும் மிக முக்கியமானது என்று, பெங்களூரு முன்னாள் பேராயர் பெர்னார்டு மொராஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கர்நாடகாவின் 224 தொகுதிகளில் வருகிற மே 12ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்கள் குறித்து ஆசியச் செய்தியிடம் இவ்வாறு பேசியுள்ள பேராயர் பெர்னார்டு மொராஸ் அவர்கள், அடிப்படைவாத அமைப்புகள் பரவி வருவதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தார்.

உண்மையான தேசியவாதம் என்ற முகமூடியுடன் சேரும் கூட்டம், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற நஞ்சுகலந்து கருத்தியலைப் பரப்பி வருகின்றது, இக்கருத்தியல், இந்தியாவின் சிறப்புப்பண்புக்கு முற்றிலும் அந்நியமானது என்றும், பேராயர் பெர்னார்டு மொராஸ் அவர்கள் கூறியுள்ளார்.

தற்போது இந்தியாவை ஆட்கொண்டிருக்கும் ஆபத்தான சூழ்நிலை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டுமெனவும், நாம் எல்லாரும், கவனம், ஞானம் மற்றும் விவேகத்துடன் நம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார், பேராயர் பெர்னார்டு மொராஸ்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.