2018-04-28 14:58:00

இமயமாகும் இளமை – உயிர்காக்கும் ‘வெள்ளைத் தலைக்கவசங்கள்’


ஏப்ரல் 29, இஞ்ஞாயிறன்று, வேதியல் போரினால் துன்புறுவோரை நினைவுகூரும் உலக நாள் கடைபிடிக்கப்படும் வேளையில், சிரியாவில் துன்புறும் மக்கள் நம் நினைவுகளில் தோன்றுகின்றனர். இவர்களைக் காப்பதற்காக, தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும்  ஓர் இளையோர் அணியை, பெருமையுடன், நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறோம்.

சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் இடங்களில், வெள்ளை நிற தலைக்கவசம் அணிந்த வீரர்கள், பொதுமக்களைக் காப்பாற்ற விரைந்து செல்கின்றனர். சிரிய - இரஷ்ய கூட்டுப் படைகளின் தாக்குதலால் தரைமட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கிக் கிடக்கும் மக்களை மருத்துவனைகளில் சேர்க்கும் பணியை ‘வெள்ளைத் தலைக்கவசங்கள்’ (White helmets) என்ற தன்னார்வ அமைப்பு செய்து வருகிறது.

ஜேம்ஸ் லெ மெசுரியெர் (James Le Mesurier) என்பவர் நிறுவிய இந்த அமைப்பில் 3000த்திற்கும் அதிகமான தன்னார்வப் பணியாளர்கள் உள்ளனர். சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கிய 2014ம் ஆண்டு முதல் இயங்கிவரும் ‘ஒயிட் ஹெல்மெட்ஸ்’ அமைப்பைச் சார்ந்த பலர், பொறியாளர்கள், ஓவியர்கள், வங்கி அதிகாரிகள், மற்றும் மாணவர்கள். இவ்வமைப்பில், பெண்களும் பணியாற்றுகின்றனர். இதுவரை 1,14,000க்கும் அதிகமான உயிர்களை ‘ஒயிட் ஹெல்மெட்ஸ்’ அமைப்பினர் காப்பாற்றியுள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

மீட்புப் பணிகள் மட்டுமல்லாது, வானிலிருந்து கட்டிடங்களை நோக்கி குண்டுகள் விழும்போது, எப்படி தற்காத்து கொள்ளவேண்டும் என்ற பயிற்சியையும் சிரிய மக்களுக்கு அளிக்கும் இவ்வமைப்பினர், போர் பகுதிகளில் நடக்கும் அட்டூழியங்களை நேரடியாகப் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இவர்கள் இந்தக் கொடூரங்களை உலகறியச் செய்வதனால், இவர்களை, தீவிரவாதிகளுக்கு துணை செல்லும் அமைப்பினர் என்று, சிரியா அரசும், இரஷ்ய அரசும் பழி சுமத்தி வருகின்றன. இருந்தாலும், இவர்கள் தங்கள் பணியை இதுவரை கைவிடவில்லை.

ஆபத்து நிறைந்த இப்பணியை ஒவ்வொரு நாளும் ஆற்றிவரும் இவர்களில், இதுவரை, 204 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இவ்வமைப்பின் அறிக்கையொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.