2018-04-28 15:11:00

பாஸ்கா காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


மரத்தில் இருந்த இலைக்கு 'போர்' அடித்தது. இன்னும் எத்தனை நாள் இந்த மரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பது என்ற சலிப்பு அதற்கு. வானில் சிறகடித்துப் பறந்த பறவைகளைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட்டது. இலையின் ஏக்கம், எரிச்சலாக மாறியது. இந்தப் பாழாய்போன மரத்திலிருந்து எப்போதுதான் எனக்கு விடுதலை கிடைக்குமோ என்று புலம்பித் தீர்த்தது.

இலை, ஏங்கிக் காத்திருந்த அந்த விடுதலை நாள் வந்தது, இலையுதிர் காலத்தில். மரத்திலிருந்து விடுதலை பெற்ற இலை, தன்னை இதுவரைத் தாங்கி, வளர்த்துவந்த மரத்திற்கு விடைகூடச் சொல்லாமல், வீசியத் தென்றலில் மிதந்து சென்றது. பறவையைப் போல தானும் பறக்க முடிகிறதே என்று இலைக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி, ஒரு சில நொடிகளே நீடித்தது.

உதிர்ந்த இலை, இறுதியில் தரையில் விழுந்தது. என்னதான் முயன்றாலும், அதனால் மீண்டும் பறக்க முடியவில்லை. தான் பறந்தபோது, தன்னைத் தாங்கியதுபோல் தெரிந்த காற்று, இப்போது, தன் மீது புழுதியை வாரி இறைத்தது. காய்ந்து விழுந்த மற்ற இலைகள் அதன் மீது விழுந்து மூடின. மனிதர்கள் அதனை மிதித்துச் சென்றனர். இலைக்கு மூச்சுத் திணறியது.

கண்களில் நீர் பொங்க, அண்ணாந்து பார்த்தது இலை. தான் வாழ்ந்த மரக்கிளையில் அசைந்தாடிய மற்ற இலைகள், தன்னைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதைப்போல் இருந்தது. "நான் அங்கேயே தங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்ற ஏக்கம் இலையைச் சூழ்ந்தது.

மரத்துடன் இணைந்திருக்கும் வரையில் இலைக்கு இன்பமான வாழ்வு. பிரிந்தால், தாழ்வு... மரணம். இதையொத்த கருத்தை இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகிறார் இயேசு:

“நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.” (யோவான் 15:5)

உவமைகளிலும், உருவகங்களிலும் பேசுவது, இயேசுவுக்குக் கைவந்த கலை என்று நமக்குத் தெரியும். நானே வாழ்வு தரும் உணவு, நானே உலகின் ஒளி, நல்ல ஆயன் நானே என்று, இயேசு, தன்னை, உருவகப்படுத்திக் கூறியுள்ள வாக்கியங்கள், யோவான் நற்செய்தியில் ஏழுமுறை இடம்பெற்றுள்ளன. நம் வாழ்விலும், நம்மைப்பற்றியும், அடுத்தவரைப்பற்றியும், அவ்வப்போது உருவகங்களில் பேசுகிறோம். விளையாட்டாக, கேலியாகச் சொல்லும் உருவகங்களைவிட, இக்கட்டான, நெருக்கடியான வேளைகளில் நாம் சொல்லும் உருவகங்கள் ஆழந்த பொருளுள்ளவை. "உங்களை நான் மலைபோல நம்பியிருக்கிறேன்" என்று, ஓர் இக்கட்டானச் சூழலில், நண்பரிடம் சொல்லும்போது, அவர்மீது நமக்கு உள்ள ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படும். "என் மகள் கணக்குல புலி" என்று ஒரு தந்தை சொல்லும்போது, அவரது மகளைப்பற்றி அவர் கொண்டிருக்கும் உள்ளார்ந்த பெருமிதம் வெளிப்படும்.

நமது உண்மையான இயல்பு எப்போது அதிகம் வெளிப்படுகின்றது? எதிர்ப்பு, குழப்பம், போராட்டம் இவை பெருகும்போது, நமது உண்மை இயல்பு வெளிப்படும். வாழ்க்கை, மிகச் சீராக, சுமுகமாகச் செல்லும்போது, நாம் எதை நம்புகிறோம், எது நமது வாழ்வின் அடிப்படை என்ற கேள்விகளெல்லாம் எழாது. ஆனால், போராட்டங்களில், சங்கடங்களில் நாம் சிக்கிக்கொள்ளும்போது, நாம் எப்படிப்பட்டவர்கள், எதை நம்பி வாழ்கிறோம் என்ற உண்மைகள் வெளிப்படும். உண்மைத் தங்கமோ, போலித் தங்கமோ அழகியதொரு கண்ணாடி பேழைக்குள் இருக்கும்போது, ஒரே விதத்தில் மின்னும். வேறுபாடு தெரியாது. தீயில் இடப்பட்டால் தான் உண்மைத் தங்கமும், போலித் தங்கமும் தங்கள் உண்மை நிலைகளை வெளிப்படுத்தும்.

யோவான் நற்செய்தியில், இயேசு தன்னை உருவகப்படுத்திப் பேசிய 'நானே' என்ற வாக்கியங்கள் அனைத்தும், எதிர்ப்புகள், குழப்பங்கள் மத்தியில் சொல்லப்பட்டவை என்பதை உணரலாம். "நல்ல ஆயன் நானே" என்று இயேசு கூறியதை, சென்ற வார நற்செய்தியாக நாம் கேட்டோம். "உண்மையான திராட்சைச் செடி நானே" என்று, இயேசு, இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

"நல்ல ஆயன் நானே" என்று இயேசு சொன்னது, தன் புகழைப் பறைசாற்ற, அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. ஒரு நெருக்கடியான நேரத்தில், அதுவும், தன்னால் நன்மைபெற்ற ஒருவர், மதத்தலைவர்களிடமிருந்து வெறுப்பைத் தேடிக்கொண்டார் என்பதை அறிந்த நேரத்தில், இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னார்.

பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்குகிறார். அந்த அன்பான, அற்புதமானச் செயலுக்குத் தவறானக் காரணங்கள் சொல்லி, இயேசுவை ஒரு பாவி என்று முத்திரை குத்துகின்றனர், பரிசேயர்களும், மதத்தலைவர்களும் (யோவான் 9:24); அது மட்டுமல்ல, இயேசுவின் புதுமையால் பார்வை பெற்றவரையும், யூத சமூகத்திலிருந்து வெளியேத் தள்ளினர் (யோவான் 9:34) என்று வாசிக்கிறோம். இந்நேரத்தில் இயேசு அங்கு செல்கிறார்.

பிறவியிலேயே பார்வை இழந்ததால், தன்னை ஒரு பாவி என்று முத்திரை குத்தி, வெறுத்து ஒதுக்கிய சமுதாயம், தான் பார்வை பெற்றபிறகும் தன்னை ஒதுக்கிவைத்ததை அறிந்து, அம்மனிதரின் உள்ளம் வேதனையில் வெந்து போயிருக்கும். அவர் உள்ளத்தில் நிறைந்த வேதனையாலும், வெறுப்பாலும், அவர் மீண்டும் தன் ‘பார்வை’யை இழந்துவிடக்கூடாது என்ற பரிவினால், இயேசு, ஒரு நல்லாயனாக, அவரைத் தேடிச்சென்றார். 9ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்நிகழ்வைத் தொடர்ந்து வரும் 10ம் பிரிவில் இயேசு 'நல்ல ஆயன் நானே' (யோவான் 10:14) என்று தன்னையே அடையாளப்படுத்துகிறார்.

இதைவிட நெருக்கடியான ஒரு சூழலில், தன் சீடர்கள் தவித்தபோது, இயேசு, தன்னை ஒரு திராட்சைச் செடியாகவும், அவர்களை, கிளைகளாகவும் ஒப்புமைப்படுத்திப் பேசினார். தன் சீடர்களுடன் இறுதி இரவுணவைப் பகிர்ந்தபோது, இயேசு, இவ்வார்த்தைகளைச் சொன்னார். அந்த இறுதி இரவுணவு, கலகலப்பான, மகிழ்வானச் சூழலில் பகிரப்பட்ட உணவு அல்ல என்பது நமக்குத் தெரியும். பயம், கலக்கம், சந்தேகம் என்ற எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னார்.

இறுதி இரவுணவின்போது, சீடர்கள் கலக்கமடையக் காரணம் என்ன? பன்னிரு சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுப்பார்; மற்றொரு சீடர், இயேசுவை மறுதலிப்பார் என்ற இரு பெரும் கசப்பான உண்மைகளை, இயேசு அவ்வேளையில் பகிர்ந்துகொண்டார். உண்மைகள் பொதுவாகவே கசக்கும்; அதுவும், நம்பிக்கைத் துரோகம், மறுதலிப்பு என்ற உண்மைகள் பெரிதும் கசக்கும். இயேசு கூறிய கசப்பான உண்மைகளால், நம்பிக்கை இழந்து, பயத்தில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம், தன்னை ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்தி இயேசு பேசுகிறார். அந்தச் செடியின் கிளைகளாக, தன் சீடர்கள் வாழவேண்டும் என்பதை அவர்கள் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிப்பதற்காக இயேசு இவ்வுருவகத்தைப் பயன்படுத்துகிறார்.

திராட்சைச் செடியும், கொடியும், பல சவால்களை நமக்கு முன் வைக்கின்றன. செடியுடன் கொடிகள் இணைந்துவிட்டால், எல்லாம் சுகமாக இருக்கும் என்ற தவறான கற்பனையை இயேசு தரவில்லை. “என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் என் தந்தை தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.” (யோவான் 15:2) என்று இயேசு கூறினார். கனிகொடாத கொடிகள் வெட்டப்படும். கனிதரும் கொடிகளும், கூடுதல் கனி தரவேண்டுமெனில், துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இயேசு சொல்கிறார்.

திராட்சைச் செடியும், கொடியும் பல வேதனைகளைத் தாங்கினால் மட்டுமே, தரமானக் கனிகள் தோன்றும். அதேபோல், சுவையுள்ள இரசமாக மாறுவதற்கு, திராட்சைக் கனிகள் கசக்கிப் பிழியப்படவேண்டும். இத்துன்பங்களில் எல்லாம் இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள் எவை? திராட்சைத் தோட்டத்தை கவனத்தோடு, கரிசனையோடு நட்டு வளர்ப்பவர் விண்ணகத் தந்தை என்பதும், கிளைகள் அனுபவிக்கும் துன்பங்களில் இயேசுவும் உடனிருப்பார் என்பதும், இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள்.

இயேசுவுடன் இணையும் வாழ்வு, பயன்தரும் வாழ்வாக, உயர்ந்து செல்லும் வாழ்வாக அமையும் என்பதை விளக்க மற்றோர் உருவகம் உதவியாக இருக்கும். அமெரிக்க இராணுவத்தில், பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களில், மேலே சுழலும் இறக்கைகளை ஹெலிகாப்டருடன் பிணைக்க, MRRN என்ற திருகாணிகளைப் பயன்படுத்தினர். MRRN என்றால், Main Rotor Retaining Nut, அதாவது, ‘சுழல் விசையுடன் பிணைத்து வைக்கும் மையத் திருகாணி’ என்று பெயர். இப்பெயர், சொல்வதற்கு, நீளமாக, கடினமாக இருந்ததால், இதற்குப் பதில், இராணுவ வீரர்கள், இந்தத் திருகாணியை, 'இயேசு திருகாணி' (Jesus Nut) என்று பெயரிட்டனர். இந்தப் பெயர் வைக்கப்பட்டதன் காரணத்தை வீரர்களிடம் கேட்டபோது, அவர்கள் தந்த விளக்கம், அழகான உருவகமாகத் தெரிந்தது.

ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருக்கும்போது, இந்த MRRN, அல்லது, 'இயேசு திருகாணி' கழன்றுவிட்டால், மேலே சுற்றும் இறக்கைகள் ஹெலிகாப்டரிலிருந்து பிரிந்துவிடும். அந்த இறக்கைகளின் சுழற்சியால் அதுவரை வானத்தில் தாங்கப்பட்ட ஹெலிகாப்டர், நேரே பூமியில் விழுந்து நொறுங்க வேண்டியதுதான். அந்நேரத்தில், ஹெலிகாப்டரில் இருப்பவர்களை, இயேசு மட்டுமே காப்பாற்றமுடியும் என்பதை வீரர்கள் உணர்ந்ததால், அந்த மையத் திருகாணிக்கு, 'இயேசு திருகாணி' என்று பெயரிட்டனர்.

ஹெலிகாப்டரின் இறக்கைகள் போல சுற்றிச் சுழலும் நமது வாழ்வை, இறுகப் பிணைப்பதற்கு இயேசு என்ற திருகாணி இல்லையெனில், வானில் பறப்பதாய் நாம் நினைக்கும் வாழ்வு, பாதாளத்தில் மோதி, சிதற வேண்டியதுதான்.

பொறுமையாக, கடின உழைப்புடன் வளர்க்கப்பட்ட திராட்சைத் தோட்டம் வளமான, சுவையான கனிகளைத் தருவதுபோல், நாம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளும், இனி தொடரப்போகும் முயற்சிகளும் நல்ல கனிகளைத் தரவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.

இயேசு என்ற செடியுடன் இணைந்திருக்கும் வரை, நாம் மிகுந்த கனி தருவோம்.

இயேசு என்ற திருகாணியுடன் இணைந்திருக்கும் வரை, வானில் உயரப் பறப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.