2018-04-30 13:42:00

வாரம் ஓர் அலசல் – உழைக்காமல் கிடைப்பது நிலைக்காது


ஏப்.30,2018. நேர்மையாக உழைக்காமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது, அதன் அருமையும் தெரியாது. அதேநேரம், உழைத்துப் பெற்ற பொருளை இழக்க மனம் ஒருபோதும் நினைக்காது. இன்று மாநகரங்களில் வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டடங்கள், புதிய புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இவ்விடங்களில், காலநிலைக்கேற்ற வசதிகளுடன் அமைக்கப்பட்ட அறைகளில் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். சொகுசான கட்டங்கள் அமைப்பதற்கும், இவ்விடங்களில் வேலைசெய்வோரின் அன்றாட உணவு, உடை உட்பட எல்லா வாழ்க்கை வசதிகளுக்கும், எத்தனையோ மக்கள், வெப்பத்திலும், குளிரிலும் பட்டினி பசியோடு வேலை செய்கின்றனர். உடல் உழைப்பை மூலதனமாக்கும் விவசாயப் பெருமக்கள் இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லில் அடங்காதவை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய மாநில அரசுகளுக்குப் போதிய அரசியல் அழுத்தம் கொடுத்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அதிலும், மே 03, வருகிற வியாழக்கிழமையன்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையின் போது, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான நல்ல தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. திருச்சியில் காவிரி நதிநீர் மீட்புக் குழு சார்பில், ஏப்ரல் 29, இஞ்ஞாயிற்றுக்கிழமை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மறைமாவட்ட கிறித்துவ அமைப்பு, ஏப்ரல் 28, இச்சனிக்கிழமையன்று போராட்டம் நடத்தியது. காவிரி மேலாண்மை வாரியம் சார்பாக, உச்ச நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என நம்புவோம்

மே 01, உலக உழைப்பாளர் தினம். 1880களில், உலகெங்கும் உருவான பொதுவுடமை அமைப்புகளும், தொழிற்சங்கங்களுமே, இந்த உலக தினம் உருவாகக் காரணமாக இருந்தன. கதிரவன் உதிக்கும் அதிகாலை முதல், அந்தி சாயும் வேளைவரை, தொழிலாளர் வர்க்கம் வேலை செய்வதற்கு விதிக்கப்பட்ட கொடுமைக்கு முடிவுகட்ட விரும்பின, இந்த அமைப்புகள். தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை என்பதை வலியுறுத்தி, 1886ம் ஆண்டு மே முதல் நாளன்று, உலக நாடுகளில் போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் தீவிரமடைந்தன. அதே ஆண்டு மே 4ம் தேதி, சிகாகோ நகரின் Haymarket வளாகத்தில் போராட்டம் நடத்திய கூட்டத்தின்மீது காவல்துறையினரின் தாக்குதல் எல்லை மீறியது. இதில், பலர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இவ்வாறு கடுமையாகப் போராடியதன் விளைவாகத்தான், உலகம் முழுவதும், எட்டு மணி நேர வேலை என்பது உறுதிசெய்யப்பட்டது. உழைப்புக்கேற்ற ஊதியம், பணிப் பாதுகாப்பு, வேலைக்கான அங்கீகாரம் போன்றவற்றிலும் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. ஆயினும், பல இடங்களில் இன்றைய நிலைமை வேறு விதமாகவே உள்ளது.  சிறுவர், சிறுமியர் முதல் எல்லா வயதினரும் தொழில்களில் சுரண்டப்படுகின்றனர் மற்றும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர்.

நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை பாதுகாப்புக்கும் ஒன்றிணைந்து உழைப்போம் என்ற தலைப்பில், மே 01, இச்செவ்வாயன்று, இவ்வாண்டின் உலக உழைப்பாளர் நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களுக்குத் தனியிடம் உள்ளது. தன் குடும்பத்திற்காக வீட்டிலும், வெளியிலும் கடுமையாய் உழைத்து வரும் பெண்களை நினைத்து இந்நாளில் ஒரு கேள்வி எழுகின்றது. நாடுகளில் தொழிலாளர்களுக்குச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எத்தனை இடங்களில் பெண் உழைப்பாளர்களுக்குச் சிலைகள் உள்ளன? மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை உண்டு. ஆனால், அதில் ஓர் ஓரமாகக்கூடப் பெண்ணுக்கு இடமில்லையே. கல் பிளந்து, மலை பிளந்து, கருவியெல்லாம் செய்தவை ஆணின் கரங்கள் மட்டும்தானா? ஆதவன் கிழக்கில் உதிப்பது எத்தனை இயல்போ, அத்தகைய இயல்போடுதான் பெண்களின் உழைப்பும், மாண்பும் காலங்காலமாகச் சுரண்டப்பட்டு வருகிறது. “உடலைக் கசக்கி உதிர்த்த வேர்வையின் ஒவ்வொரு துளியிலும் கண்டேன், இவ்வுலகு உழைப்பவர்க்கு உரியதென்பதையே’’ என, பாவேந்தர் பாரதிதாசன் தன் கவிதை ஒன்றில் சொல்லியுள்ளார். உழைப்பு என்று வந்துவிட்டால், அதில் வேறுபாடு எதற்கு? 

உயிர்போகும் நிலை வந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே. இழந்தவைகளை

மீண்டும் கொண்டுவரும் ஆற்றல், அது ஒன்றுக்கு மட்டும்தான் உண்டு. இக்கூற்றுக்கு ஏற்றால்போல், எத்தனையோ பெண்கள், தன்னம்பிக்கையை மட்டுமே சொத்தாகக் கொண்டு உழைப்பால் உயர்ந்து நிற்கின்றனர். நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர்,  ஃபிளெக்ஸ் போர்டு (Flex Board) தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவருவதன் மூலம், தன்னம்பிக்கைப் பெண்ணாகத் திகழ்கிறார். கால்கள் செயலிழந்து, நடக்க முடியாத நிலையிலும், சுயசார்புடன் வாழ்ந்து வருபவர் இவர் என்று, தி இந்து நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. ஜெயலட்சுமி அவர்களின் வீட்டில், அவரையும் சேர்த்து ஐந்து பெண் குழந்தைகள். ஜெயலட்சுமியின் தந்தை பூ கட்டும் தொழிலாளி. ஜெயலட்சுமி, தனது ஐந்தாவது வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், ஜெயலட்சுமியின் கால்கள் இரண்டும் செயலிழந்தன. இதனால் மனம் உடைந்துபோன அவருடைய பெற்றோர், தங்கள் மகளுக்கு ஏற்பட்ட குறைபாடு அவரது எதிர்காலத்துக்குத் தடையாக இருக்கக் கூடாது என நினைத்தனர். காரைக்குடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் ஜெயலட்சுமியைச் சேர்த்துப் படிக்க வைத்தனர். அதன்பின்னர் நடந்ததை ஜெயலட்சுமி அவர்களே விவரிக்கிறார்.

“நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது என் அப்பா இறந்துவிட்டார். குடும்பப் பாரம் முழுவதும் என் அம்மா மேல் விழுந்தது. அம்மாவும் பூ கட்டும் தொழிலைச் செய்து வந்தார்கள். அதில் கிடைத்த வருமானத்தை வைத்துத்தான் எங்கள் எல்லாரையும் வளர்த்தார்கள். நான், குடும்பச் சுமையால் பன்னிரண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்துவிட்டு, அம்மாவுக்கு உதவியாகப் பூ கட்டும் தொழிலைச் செய்துவந்தேன். என்னைப் பின்பற்றி, எனது சகோதரிகளும் பள்ளிப் படிப்பைக் கைவிட்டு, அம்மாவுக்கு உதவியாகப் பூ கட்டும் வேலையைச் செய்தனர். ஒரு சகோதரி மட்டும் வறுமைக்கு இடையிலும் கஷ்டப்பட்டுப் படித்து, பட்டப் படிப்பை நிறைவுசெய்தார். குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து வேலை செய்தபோதும், சொல்லிக்கொள்ளும்படி வருமானம் கிடைக்கவில்லை. குடும்பத்தை நடத்துவது மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்தச் சூழலில்தான் வேறு நல்ல வேலைக்குச் செல்ல முடிவுசெய்தேன். என்னால் நடக்க முடியாது என்பதால், அதற்கு ஏற்ற வேலையைத் தேட ஆரம்பித்தேன். முதலில் என் வீட்டின் அருகே ஃபிளெக்ஸ் போர்டுகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலைக்குச் சேர்ந்த பின்னர், கணினியில் வடிவமைக்கக் கற்றுக்கொண்டேன். அந்தப் பணியில் ஆர்வம் இருந்ததால் ஃபிளெக்ஸ் டிசைனிங் முழுவதையும் நன்கு கற்றுக்கொண்டேன். நான் அங்கு வேலை செய்த ஏழு ஆண்டுகளில் எல்லா வேலையையும் நன்றாகக் கற்றுக்கொண்டேன். நானே தனியாகத் தொழில் தொடங்கினால் என்ன? என்ற எண்ணம் வந்தது. அரசிடமிருந்து கடனுதவி பெறும் வழிமுறை தெரியாததால், வீட்டில் இருந்த நகையை விற்றும், தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கியும் தொழில் தொடங்கினேன். ஆரம்பத்தில் டிசைன் வேலைகளை மட்டும் செய்தேன். தற்போது வங்கிக் கடன் மூலம் புதிய இயந்திரம் வாங்கி ஃபிளெக்ஸ் டிசைன், விசிட்டிங் கார்டு, போஸ்டர், வினைல் போர்டு, லைட்டிங் போர்டு ஆகியவற்றைத் தயாரித்துவருகிறேன். என்னுடன் பணிபுரிந்த ஒருவரை நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டேன். பேனர்களை வடிமைக்கும் பணியை நான் கவனித்துக்கொள்ள, அதை பிரிண்ட் செய்து வாடிக்கையாளர் விரும்பும் இடத்தில் நிறுவும் பணியை, எனது கணவர் செய்கிறார். தற்போது எனது நிறுவனத்தில் இருவர் பணிபுரிகின்றனர். எதிர்காலத்தில் வெவ்வேறு இடங்களில் கிளை தொடங்கி, என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் உள்ளது. ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. எது வந்தாலும் சமாளித்துவிடலாம் என உறுதியாக நின்றேன். பிறகு எல்லாம் பழகிவிட்டது. உடல் குறைபாட்டை மட்டுமே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால், கடைசிவரை அப்படியே கிடக்க வேண்டியதுதான். வாழ்க்கையில எல்லாமே நாம் நினைக்கின்ற மாதிரி நடந்துவிட்டால், அதில் என்ன சுவை இருக்கும்? போராடி ஜெயிப்பதுதானே சவால்! உடல் குறைபாடு ஏற்பட்டுள்ளதை மறந்து நமக்கான அடையாளத்தை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சொல்லும் ஜெயலட்சுமி அவர்களின், பணியின் தரமும், குறித்த தேதியில் பணியை முடித்துக் கொடுக்கும் பொறுப்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது என செய்திகளில் (நன்றி முகம் நூறு தி இந்து) வாசித்தோம். மாற்றுத்திறனாளி ஜெயலட்சுமி அவர்கள்,  மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி, முன்னேற வழியில்லையே என அவநம்பிக்கையோடு முடங்கிக் கிடக்கும் பலருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். தன்னம்பிக்கை என்பது, மனதின் மலர்ச்சி, மாற்றத்தின் வளர்ச்சி என்று சொல்கிறார்கள். ஜெயலட்சுமி அவர்களும், இரக்கமோ பரிதாபமோ தேவைப்படாத உறுதியுடன்,  மலர்ச்சியோடு உழைத்து வருகின்றார். தன்னம்பிக்கையுடன் போராடினால் எதிலும் ஜெயித்துக்காட்டலாம் என்ற உறுதியை வழங்குகிறார்.

உழைப்பாளர்கள் எல்லாரையும் நினைத்து அவர்களுக்கு நன்றிகூறும் இவ்வேளையில், தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை உணர்ந்து, உழைப்பாளர்கள் அனைவருக்கும் உரிய மாண்பையும், மரியாதையையும் அளிப்போம். உண்மையாக உழைக்காமல் கிடைப்பது எதுவும் நிலைக்காது. அதேநேரம், உழைத்துப் பெற்ற பொருளை இழக்க மனம் ஒருபோதும் நினைக்காது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.