2018-05-01 14:11:00

பத்திரிகையாளர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு, புனித யோசேப்பு


மே,01,2018. அமைதி என்பதே, தகவல் பரிமாற்றத்தின் முதல் நிபந்தனை, ஏனெனில் மௌனமாக இருப்பதன் வழியாக மட்டுமே மற்றவர்களுக்குச் செவிமடுக்க முடியும் என இச்செவ்வாய்க்கிழமை காலை தன்னை சந்திக்க வந்திருந்த பத்திரிகைத் துறையினரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Avvenire என்ற இத்தாலிய கத்தோலிக்க நாளிதழின் உயர் மட்ட அதிகாரிகளை இச்செவ்வாயன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பு, தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றுவோருக்கு, தன் மௌனம் மற்றும் செவிமடுத்தல் வழியாக நல்ல எடுத்துக்காட்டாக உள்ளார் என்றார்.

தனக்குப் புரியாத சூழல்களில்கூட, இருளில் தடுமாற்றமின்றி நடக்கவும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களையும், ஒப்படைக்கப்பட்ட பணியையும் பொறுப்புடன் வழி நடத்தவும், புனித யோசேப்பு நமக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக உள்ளார் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சமூகத்தொடர்புத்துறை என்பது உண்மை, அழகு, பொதுநலன் போன்றவைகளை நோக்கி திரும்பியதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, இன்றைய உலகில் மிக வேகமான, அதேவேளை, மேலோட்டமான கலாச்சாரப் போக்கைப் பார்க்கின்றோம் எனவும் கவலையை வெளியிட்டார்.

மற்றவர்களுக்கு செவிமடுக்கத் துவங்கும்போது, கலந்துரையாடல் பிறக்கிறது, இந்த கலந்துரையாடலே, அச்சத்தையும் சந்தேகங்களையும் போக்கி, உறவுகளை வளர்க்கிறது எனவும் கூறினார் திருத்தந்தை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.