2018-05-01 15:54:00

மத நம்பிக்கைகளுக்காக சிறைவைக்கப்பட்டுள்ளோருக்கு செபம்


மே,01,2018. பாகிஸ்தான் நாட்டில் மத நம்பிக்கைகளுக்காக சிறைத்தண்டனைகளை அனுபவிப்பவர்கள் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுபவர்களுக்காக செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது, தலத்திருஅவை.

கிறிஸ்தவ மத நம்பிக்கைக்காக 2014ம் ஆண்டு முதல் சிறைவைக்கப்பட்டிருக்கும் Sawan Masih என்பவருக்காகவும், ஒன்பது ஆண்டுகளாக சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள Asia Bibi என்பவருக்காகவும், பாகிஸ்தான் கிறிஸ்தவத் தலைவர்கள் ஒன்றிணைந்து செப வழிபாடு ஒன்றை நடத்தியபோது, இந்த அழைப்பு விடப்பட்ட‌து.

இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி பேராயரும், பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவருமான பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்களால் ஏற்பாடுச் செய்யப்பட்ட இவ்வழிபாட்டில் பாகிஸ்தானின் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தவறான முறையில் தேவ நிந்தனை குற்றம் சாட்டப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள Asia Bibiயின் வழக்கை பாகிஸ்தான் தலைமை நீதிபதி, தானே தலையிட்டு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளதும், 2014ம் ஆண்டு முதல் மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையிலிருக்கும் Sawan Masih வழக்கை மீண்டும் ஆய்வு செய்ய இலாகூர் உயர்நீதிமன்றம் முன்வந்துள்ளதும், நல்ல நம்பிக்கை தரும் செய்திகள் என கிறிஸ்தவ தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.