சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன் பாகம் 5

ஹிப்போ நகர ஆயர் புனித அகுஸ்தீன் - RV

02/05/2018 15:06

மே,02,2018. புனித அகுஸ்தீன் அவர்கள், தன் இளமைக் காலத்தில், வாழ்வுக்கு உண்மையானப் பொருளைத் தேடினார். இதனால் மனிக்கேயக் கொள்கையைத் தழுவினார். அது அவரின் தேடலுக்குப் பதில் சொல்லவில்லை. பின்னர், புனித ஆயர் அம்புரோஸ் அவர்களின் விவிலிய மறையுரைகளில் தன் தேடல்களுக்குப் பதில்களைக் கண்டுகொண்டார். முப்பது வயதில் கிறிஸ்தவத்திற்கு மாறிய இவர், வட ஆப்ரிக்காவின் அல்ஜீரியாவுக்குத் திரும்பினார். அந்நாட்டில் தகாஸ்தே நகரிலிருந்த தனது பூர்வீகச் சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு அளித்தார். தனது வீட்டை துறவு இல்லமாக மாற்றி அங்கு வாழ்வைத் தொடங்கினார். கி.பி.395ம் ஆண்டில் ஹிப்போ நகர் வாரிசு ஆயராக நியமிக்கப்பட்டார். பின்னர் விரைவில் அந்நகரின் ஆயரானார். இதனாலே இவர் ஹிப்போ நகர் அகுஸ்தீன் என அழைக்கப்படுகின்றார். ஹிப்போ நகர மக்கள் கிறிஸ்தவத்தை ஏற்கச் செய்வதற்கு கடினமாக உழைத்தார் புனித அகுஸ்தீன். ஆயரான பின்னர், இவர் தனது துறவு இல்லத்தை விட்டுவந்தாலும், தொடர்ந்து துறவு வாழ்வையே வாழ்ந்தார். புனித அகுஸ்தீன் அவர்கள், தனது மனமாற்ற வாழ்வு பற்றி, அவரே தன் சுயவரலாறு நூலில் எழுதியிருந்தாலும், அவரின் பிற்கால வாழ்வு பற்றி, அவரின் நண்பரான, Calama ஆயர் Possidius அவர்கள், இவ்வாறு எழுதி வைத்துள்ளார். (Calama நகர், தற்போதைய அல்ஜீரியா நாட்டில் Guelma என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது) புனித அகுஸ்தீன், மிகச் சிறந்த அறிவாளி. சிறந்த பேச்சாளர். கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர்களை, தன் சொல்லாற்றலால்  வெல்லக்கூடியவர். எப்போதாவது சாப்பிடுவார், சோர்வின்றி வேலை செய்வார், புறங்கூறுதலையும், புறணி பேசுதலையும் தவிர்ப்பார், உடலின் சோதனைகளைக் கடுமையாய் எதிர்த்துப் போராடுவார், தனது மறைமாவட்டத்தில், நிதியை நிர்வகிப்பதில் விவேகத்தைக் கையாண்டார் என்று எழுதியுள்ளார், ஆயர் Possidius. புனித அகுஸ்தீன் அவர்கள், தன் பிற்கால வாழ்வைச் செபத்திலும், தவத்திலும் செலவழித்தார். தாவீது அரசரின் தவப்பாடலான திருப்பாடல் 51, அவர் அறையின் சுவர்களில் தொங்கவிடப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அதனால் அவற்றை அவர் வாசிக்க விரும்பினார். ஹிப்போவிலுள்ள ஆலய நூலகமும், அனைத்து நூல்களும் கவனமுடன் பாதுகாக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார். புனித அகுஸ்தீன் அவர்கள், மூன்று மாதம் காய்ச்சலால் துன்புற்றபின், 76 வயதை எட்டும் முன்பே, கி.பி.430ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் நாளன்று, காலமானார்.

புனித அகுஸ்தீன் அவர்கள், இறப்பதற்கு சிறிது காலத்திற்குமுன், ஜெர்மானிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த வன்முறையாளர்கள், ஆப்ரிக்காவின் உரோமைப் பேரரசு பகுதியை ஆக்ரமித்தனர். இந்தப் பழங்குடியினர் ஆரியத் தப்பறைக் கொள்கைக்கு மனம் மாறியவர்கள். இவர்கள் உரோமைப் பேரரசை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட முரடர்கள். கி.பி.430ம் ஆண்டின் வசந்த காலத்தில் இவர்கள், ஹிப்போ நகரை ஆக்ரமித்தனர். அச்சமயத்தில், இந்த வன்முறையாளர்களில் நோயுற்ற ஒருவரை அகுஸ்தீன் குணமாக்கினார். அகுஸ்தீன் அவர்கள் இறந்த பின்னர், ஹிப்போ நகர் ஆக்ரமிப்பிலிருந்து அவர்கள் வெளியேறினாலும், மீண்டும் அவர்கள் அந்நகர் சென்று, நகரைத் தீயிட்டு கொளுத்தினர். நகர் முழுவதையும் அவர்கள் அழித்தாலும், புனித அகுஸ்தீன் அவர்களின் பேராலயத்தையும், நூலகத்தையும் மட்டும் விட்டுவைத்தனர் என்று சொல்லப்படுகின்றது. பொது மக்களின் வேண்டுகோளின்பேரில் புனிதராக அறிவிக்கப்பட்டார் அகுஸ்தீன். பின்னர், திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள், அகுஸ்தீன் அவர்களை, திருஅவையின் மறைவல்லுனராக, 1298ம் ஆண்டில் அறிவித்தார். Huneric என்பவரால் வட ஆப்ரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட கத்தோலிக்க ஆயர்கள், அகுஸ்தீன் அவர்களின் உடலை சர்தீனியாவின் காலியாரி (Cagliari) கடற்கரை நகருக்குக் கொண்டு சென்றனர். அச்சமயத்தில், கடற்கரைப் பகுதி, முஸ்லிம்களால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளானதால், அகுஸ்தீன் அவர்களின் உடலைப் பாதுகாக்கும் நோக்கத்தில், ஏறத்தாழ 720ம் ஆண்டில் இத்தாலியின் பவியா ஆயர் பீட்டர் அவர்களால், இப்புனிதரின் உடல் பவியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது புனித அகுஸ்தீன் அவர்களின் கல்லறை, பவியாவில், புனித Pietro in Ciel d'Oro ஆலயத்தில் உள்ளது. ஆயர் பீட்டர் அவர்கள், லொம்பார்தியா அரசர் Liutprandவின் மாமா ஆவார்.

1327ம் ஆண்டு சனவரியில், திருத்தந்தை 22ம் ஜான் அவர்கள் வெளியிட்ட, Veneranda Santorum Patrum அறிக்கையின் வழியாக, பவியாவில் இக்கல்லறையைப் பராமரிக்கும் பொறுப்பு, அகுஸ்தீன் சபையினரிடம் அளிக்கப்பட்டது. 1700ம் ஆண்டில், பவியாவிலிருந்து அகுஸ்தீன் சபையினர் வெளியேற்றப்பட்டனர். அச்சமயத்தில் மிலானில் அடைக்கலம் தேடிய இச்சபையினர், அகுஸ்தீனாரின் புனிதப் பண்டங்களையும் எடுத்துச் சென்றனர். எனினும் மீண்டும் 1896ம் ஆண்டில், அகுஸ்தீனாரின் புனிதப் பண்டங்கள் பவியாவில் வைக்கப்பட்டதாக ஏடுகள் கூறுகின்றன.   

புனித அகுஸ்தீன் அவர்கள், கத்தோலிக்க திருஅவை மற்றும், ஆங்கிலிக்கன் திருஅவையில், தலைசிறந்த "திருச்சபைத் தந்தை" என்று மதிக்கப்படுகிறார். புனித அகுஸ்தீன் அவர்களின் திருவிழா ஆகஸ்டு மாதம் 28ம் நாள் கொண்டாடப்படுகிறது.  இப்புனிதர் மனிதரின் மீட்புப் பற்றியும், கடவுளின் அருள் பற்றியும் அளித்த சிறப்பான போதனைகளின் காரணமாக, பல கிறிஸ்தவ சபைகள் குறிப்பாக "கால்வின் சபை" அவருக்குச் சிறப்பு மரியாதை அளிக்கின்றது.  அப்புனிதரை "திருஅவை சீர்திருத்தத்தின் ஒரு முன்னோடி" என்று போற்றுகின்றன. கீழை வழிபாட்டுமுறை சபைகள், புனித அகுஸ்தீன் அவர்களை, "முத்திப்பேறு பெற்றவர்" என்று ஏற்று அவருடைய திருவிழாவை ஜூன் 15ம் நாள் கொண்டாடுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

02/05/2018 15:06