2018-05-02 15:48:00

சிறாரின் உயிரைப் பாதுகாக்க வைட்டமின் A ஊட்டச்சத்து


மே,02,2018. சிறாரின் உயிரைப் பாதுகாக்கும் வைட்டமின் A  ஊட்டச்சத்து உடனடியாக வழங்கப்படவில்லையெனில், உலகில் 14 கோடிக்கு மேற்பட்ட சிறார், நோய், காதுகேளாமை, பார்வைக்கோளாறு, ஏன் மரணத்தைக்கூட எதிர்கொள்ளும் ஆபத்தில் உள்ளனர் என்று, யுனிசெப் அமைப்பு எச்சரித்துள்ளது.

சிறாரின் நிலை குறித்து, இப்புதனன்று புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, ஐ.நா.வின் குழந்தைநல அமைப்பான யுனிசெப், வைட்டமின் A  ஊட்டச்சத்து மருந்துகள், ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை அளிக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான சிறாரின் வாழ்வைக் காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளது.

வைட்டமின் A  ஊட்டச்சத்து, அம்மை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களிலிருந்து சிறாரைப் பாதுகாக்கும் என்றும், பொதுவாக, போலியே நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின்போது வைட்டமின் A ஊட்டச்சத்தும் சேர்த்து வழங்கப்படும் என்றும் யுனிசெப்பின் அறிக்கை கூறுகிறது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் இந்தப் பாதிப்பு அதிகம் எனவும், 2009ம் ஆண்டுக்கும், 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 78 முதல் 90 விழுக்காடாக இருந்தநிலை, 2016ம் ஆண்டில் 54 விழுக்காடாகக் குறைந்துள்ளது எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.