2018-05-02 15:18:00

திவினோ அமோரே திருத்தலத்தில் உலக அமைதிக்காக செபம்


மே,02,2018. செபிப்பது என்பது, கடவுளோடு இருப்பது, கடவுளை அனுபவிப்பது மற்றும் கடவுளை அன்புகூர்வதாகும் என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில், இப்புதனன்று வெளியிட்டுள்ளார்.

மேலும், உரோம் நகருக்கு ஏறக்குறைய 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திவினோ அமோரே (Divino Amore) எனப்படும் தெய்வீக அன்பு திருத்தலத்திற்கு, மே 01, இச்செவ்வாய் மாலை சென்று, சிரியா மற்றும் உலக அமைதிக்காக அன்னை மரியிடம் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திவினோ அமோரே அன்னை மரியா பழைய திருத்தலத்தில், பக்தர்களோடு சேர்ந்து செபமாலை செபித்து, அச்செபத்தை, உலகின் அமைதிக்காக அர்ப்பணித்த திருத்தந்தை, இச்செபத்தை ஆரம்பிப்பதற்குமுன், அத்திருத்தலத்தின் முன் கூடியிருந்த பக்தர்களிடம், தன்னோடு செபத்தில் ஒன்றித்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

திவினோ அமோரே திருத்தலத்தில் செபமாலை செபித்து, அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தையும் ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செபமாலை பக்திமுயற்சியை நிறைவுசெய்தபின்னர், அத்திருத்தலத்தின் பின்புறமுள்ள வளாகத்தில் கூடியிருந்த பெருமளவான பக்தர்களோடு சேர்ந்து, அருள்நிறைந்த மரியே என்ற செபத்தைச் செபித்து அம்மக்களை ஆசீர்வதித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.    

இந்நிகழ்வில், திவினோ அமோரே பங்குத்தளத்தின் முதல் அதிபரும், திவினோ அமோரே இருபால் துறவு சபைகளை ஆரம்பித்தவருமான, இறைஊழியர் உம்பெர்த்தோ தெரென்சி (Umberto Terenzi) அவர்களின் கல்லறையையும் ஆசிர்வதித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

13ம் நூற்றாண்டைச் சேர்ந்த, Castel di Leva எனப்படும் நுழைவாயில் கோபுரத்தில் வரையப்பட்டுள்ள அன்னை மரியா படத்தோடு, திவினோ அமோரே அன்னை மரியா பக்தி முயற்சி தொடர்புடையது. 1740ம் ஆண்டில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவுக்குத் திருப்பயணியாக வந்த ஒருவர், இந்தக் கோபுரத்தின் அருகே, வெறிநாய்களால் தாக்கப்பட்டபோது, அந்தப் பயணி, அன்னை மரியிடம் செபித்ததால் காப்பாற்றப்பட்டார் என்று, மரபு வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.