2018-05-03 15:19:00

இலங்கை திரைப்படத் துறையின் தந்தை பெரியஸ் நல்லடக்கம்


மே.03,2018. இலங்கை திரைப்படத் துறையின் தந்தை என்றழைக்கப்படும் லெஸ்டர் ஜேம்ஸ் பெரியஸ் (Lester James Peries) அவர்கள், கடந்த சனிக்கிழமை, தன் 99வது வயதில் மரணமடைந்ததையடுத்து, அவரது உடல், மே 2, இப்புதனன்று அடக்கம் செய்யப்பட்டது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

1919ம் ஆண்டு, இலங்கையின் கொழும்புவில் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்த பெரியஸ் அவர்கள், 1956ம் ஆண்டு உருவாக்கிய Rekava என்ற திரைப்படத்தின் வழியே இலங்கை திரை உலகில் புதுமையைப் புகுத்தினார் என்றும், இத்திரைப்படம் Cannes திரைப்பட விழாவில் தனிப்பட்ட அங்கீகாரம் பெற்றது என்றும் ஆசிய செய்தி கூறியுள்ளது.

இவர் உருவாக்கிய திரைப்படங்களில், 27 படங்கள் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது என்பதும், இவர் உருவாக்கிய Wekande Walauwa, என்ற திரைப்படம் ஆஸ்கர் விழாவில் பங்கேற்ற முதல் இலங்கைத் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஏப்ரல் 5ம் தேதி, பெரியஸ் அவர்கள், தன் 99வது பிறந்தநாளைச் சிறப்பித்த வேளையில், அவரை நேரில் சென்று வாழ்த்திய, இலங்கை அரசுத்தலைவர் மைத்ரிபால சிறிசேனா அவர்கள், இப்புதனன்று நடைபெற்ற பெரியஸ் அவர்களின் அடக்கம், அரசு மரியாதையுடன் நடைபெறவேண்டும் என்றும் உத்தரவிட்டார் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

இப்புதனன்று நிகழ்ந்த அடக்கச்சடங்கை, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் முன்னின்று நடத்தினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.