2018-05-03 14:59:00

எடுத்துக்காட்டான வாழ்வினால் ஈர்க்கப்பட்டு...


மே.03,2018. நமது அன்பின் வழியாகவும், சாட்சிய வாழ்வின் வழியாகவும் நமது நம்பிக்கை அடுத்த தலைமுறைகளிடம் ஒப்படைக்கப்படுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையில் கூறினார்.

திருத்தூதர்களான புனிதர்கள், பிலிப்பு, யாக்கோபு ஆகியோரின் திருநாளன்று, திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறியுள்ள கருத்துக்களை மையப்படுத்தி திருத்தந்தை தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

நம்பிக்கை என்பது விசுவாச அறிக்கைகளில் அடங்கியிருப்பதில்லை, மாறாக, நாம் பின்பற்றும் அன்பு நிறைந்த வாழ்வின் வழியே மற்றவர்களிடம் ஒப்படைக்கபப்டுகிறது என்று புனித பவுல் கூறியுள்ளதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

நமது நம்பிக்கை வெறும் கருத்துக்களின் தொகுப்பு என்றால், அந்த கருத்துக்கள் அடங்கியுள்ள நூலை படித்து, திருமுழுக்கு பெறுவதால் நம் நம்பிக்கை முழுமை அடைவதில்லை, மாறாக, நமது நம்பிக்கை, அக்கருத்துக்களை வாழ்வில் வெளிப்படுத்துவதில் முழுமை அடைகிறது என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.

போதனைகள் செய்து, மதமாற்றம் செய்வதன் வழியே திருஅவை வளர்வதில்லை, மாறாக, நம் எடுத்துக்காட்டான வாழ்வினால் ஈர்க்கப்பட்டு, மற்றவர்கள் கிறிஸ்தவ மறையைத் தழுவுவதன் வழியே, திருஅவை, எண்ணிக்கையில் வளர்கிறது என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறிய கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

மேலும், "சிலுவையில் இயேசு, அவரது அன்பின் மேன்மையையும், அவரது இரக்கத்தின் வலிமையையும் வெளிப்படுத்தினார்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் மே 3, இவ்வியாழன்  வெளியாயின.

இதற்கிடையே, தாய்லாந்து தலத்திருஅவையின் ஆயர்கள், உரோம் நகருக்கு 'அத் லிமினா' சந்திப்பை மேற்கொண்டுள்ள இவ்வேளையில், இவ்வியாழன் காலை திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.