2018-05-03 15:26:00

ஐரோப்பிய சமுதாயத்திற்கு திருத்தந்தையின் உரைகள்


மே.03,2018. ஐரோப்பிய சமுதாயத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள உரைகளின் தொகுப்பு, ஒரு நூலாக, மே 11ம் தேதி, வருகிற வெள்ளியன்று வெளியிடப்படும் என்று, வத்திக்கான் நூல் வெளியீட்டகம் அறிவித்துள்ளது.

"உறவுகளிலிருந்து, எதிர்காலத்தை மறுபடியும் எண்ணிப்பார்க்க" என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூலில், திருத்தந்தை, ஐரோப்பிய சமுதாயத்திற்கு வழங்கிய பல்வேறு உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன என்றும், இந்நூலின் அணிந்துரையை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வழங்கியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Strasbourg நகரில், 2014ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திருத்தந்தை வழங்கிய உரை, 2016ம் ஆண்டு, திருத்தந்தைக்கு Charlemagne விருது வழங்கப்பட்ட வேளையில், அதையொட்டி அவர் வழங்கிய ஏற்புரை, 2017ம் ஆண்டு, உரோம் நகரின் ஒப்பந்தம் கையெழுத்தான 60ம் ஆண்டு நிறைவையொட்டி, திருத்தந்தை வழங்கிய உரை ஆகியவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

மே 11ம் தேதி, தூரின் நகரில்  நடைபெறும் அகில உலகப் புத்தகக் கண்காட்சியில், திருப்பீட தொடர்புத் துறையின் செயலர், அருள்பணி லூச்சியோ ஏட்ரியன் ரூயிஸ் அவர்கள் இந்நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுவார் என்று வத்திக்கான் நூல் வெளியீட்டகம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.