2018-05-03 15:31:00

திருநற்கருணை பங்கில், திருத்தந்தையின் மேய்ப்புப்பணி பயணம்


மே.03,2018. மே 6ம் தேதி, வருகிற ஞாயிறு மாலை 4 மணியளவில் உரோம் நகரின் Tor de Schiavi பகுதியில் உள்ள திருநற்கருணை பங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

திருத்தந்தையின் பிரதிநிதியாக, உரோம் மறைமாவட்ட பேராயராகப் பணியாற்றும் ஆஞ்செலோ தே தொனாத்திஸ், மணிலா பேராயரும், அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே ஆகிய இருவரும் பங்கேற்கும் இந்நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பங்கில் புதிதாக நிறுவப்பட்டுள்ள "மகிழ்வின் இல்லம்" என்ற இல்லத்தை திறந்து வைக்கிறார்.

மாற்றுத்திறன் கொண்டோருக்கென உருவாக்கப்பட்டுள்ள இந்த இல்லத்தை ஆசீர்வதித்து திறந்து வைக்கும் திருத்தந்தை, பின்னர் பங்குக் கோவிலில் நிகழ்த்தும் திருப்பலியில், உயிரணுக்களில் உருவாகியுள்ள நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிறுமிக்கும் அவளது அன்னைக்கும் உறுதிபூசுதல் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பலிக்கு முன்னதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பங்கில் உள்ள இளையோர், வயது முதிர்ந்தோர், நோயுற்றோர் ஆகியோரை, தனித்தனி குழூக்களாக சந்தித்தபின், கோவிலில் மூவருக்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்குவார் என்று உரோம் மறைமாவட்ட குறிப்பு அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.