2018-05-05 15:54:00

இயேசுவின் நண்பர்களாக உங்களை அறியச் செய்யுங்கள்


மே,05,2018. இயேசுவின் நண்பர்களாக உங்களை அறியச் செய்யுங்கள், நீங்கள் அனைவரும் நண்பர்கள் என அழைக்கப்படுகின்றீர்கள், அனைவருக்கும் நண்பர்களாக இருங்கள் என்று, ஒரு பன்னாட்டு கத்தோலிக்க அமைப்பினரிடம், இச்சனிக்கிழமையன்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்களின் பொன்விழாவைச் சிறப்பித்த, உலகளாவிய Neocatechumenal Way கத்தோலிக்க அமைப்பினரின் ஏறக்குறைய ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் உறுப்பினர்களை, உரோம் நகரின் தொர் வெர்காத்தா பல்கலைக்கழக வளாகத்தில் இச்சனிக்கிழமை முற்பகலில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள் என, இயேசு தம் சீடர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்பியதை மையப்படுத்திப் பேசினார்.

இயேசு இவ்வாறு அனைவரிடமும் கூறும்போது, ஒவ்வொருவருக்கும் தம் இதயத்தில் இடமிருக்கின்றது, அந்த இதயத்தில் எவரும் ஒதுக்கப்படுவதில்லை என்று அவர் சொல்கிறார் என உரையாற்றிய திருத்தந்தை, குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளையும், அவர்களின் பிரச்சனைகள் மற்றும் குறைகளுடன் பெற்றோர் ஏற்பது போல, மறைப்பணியாளர்களும் மக்களிடம் செல்ல வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

Neocatechumenal Way அமைப்பு, இக்காலத்தில், கடவுள் திருஅவைக்கு வழங்கியுள்ள மாபெரும் கொடை எனவும், கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்த அமைப்பினர் ஆற்றியுள்ள பணிகளுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவதாகவும், கடவுளின் அன்பு நிறைந்த பராமரிப்பை நோக்கி, அவரது வாக்குறுதியில் நம்பிக்கையை இழந்துவிடாமல், முன்னோக்கிச் செல்லவும் ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.    

அதிகாரம், பணம், வெற்றிமனப்பான்மை, சமய அதிகாரம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு, உலகப்போக்கைப் புறக்கணிக்கும் திருஅவையாலே நற்செய்தி அறிவிக்க முடியும் எனவும் கூறியத் திருத்தந்தை, தங்களை பற்றுக்களிலிருந்து விடுவித்துக் கொள்பவரே, சுதந்திரம் என்ற தேனைச் சுவைக்க இயலும் என்றும் கூறினார்.

இன்றைய திருஅவைக்கு முன்னுரிமையாக உள்ளது, நற்செய்தி அறிவிப்புப்பணி என்றும், இயேசு தம் சீடர்களிடம், செல்லுங்கள் என்று மட்டுமே கூறினார் என்றும், கடவுளன்பின் மகிழ்வை இன்னும் அறியாமல் இருப்பவர்களுக்கு அறிவிக்கச் செல்லுங்கள் என்றும், அந்த அமைப்பினரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சனிக்கிழமையன்று உரோம் நகரில் நடைபெற்ற பொன் விழா நிகழ்வில், 16 கர்தினால்கள், 90 ஆயர்கள், திருப்பீடத் தூதர்கள் உட்பட ஏறக்குறைய ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் உறுப்பினர்கள், ஏறக்குறைய 135 நாடுகளிலிருந்து பங்கேற்றனர் எனச் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.