2018-05-05 16:03:00

திருத்தந்தை : நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு முன்னுரிமை


மே,05,2018. உலகளாவிய Neocatechumenal Way அமைப்பு, உரோம் நகரில் ஆரம்பிக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டைச் சிறப்பித்த இந்த அமைப்பின் ஏறக்குறைய ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் உறுப்பினர்களை, இச்சனிக்கிழமையன்று, உரோம் தொர் வெர்காத்தா பல்கலைக்கழக வளாகத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களில், 34 பேரை ஆசீர்வதித்து, உலகின் பல்வேறு பகுதிகளுக்கு புதிதாக நற்செய்தி அறிவிக்க அனுப்பினார்.

சிலுவைகளை ஆசீர்வதித்து இவர்களிடம் அளித்த திருத்தந்தை, உரோம் நகரின் பங்குத்தளங்களிலுள்ள, இந்த அமைப்பின் 25 குழுக்களை, உரோம் மறைமாவட்டத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள மக்களுக்கு உதவிசெய்து, நற்செய்தி அறிவிக்கவும் அனுப்பினார்.

Neocatechumenal Way அமைப்பினரின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு நன்றி கூறியத் திருத்தந்தை, தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

1960களில், இஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரைச் சேர்ந்த Francisco "Kiko" Argüello என்பவர், வறிய மக்கள் வாழ்ந்த Palomeras Altas பகுதிக்குச் சென்று, ஜிப்சி சமூகத்தினருக்கும் சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஏழை மக்களுக்கும் உதவி செய்தார். Carmen Hernández என்பவரும் இவரோடு விரைவில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அப்போதைய மத்ரித் பேராயர் Casimiro Morcillo González அவர்களின் ஆதரவுடன் இவ்விருவரின் பணி வளர்ந்தது. இவ்விருவரின் முயற்சியால் 1964ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதே, Neocatechumenal Way என்ற அமைப்பு. இவ்வமைப்பு, இன்று உலகலாவிய அமைப்பாக உருவாகி நற்பணியாற்றி வருகின்றது. இறைவார்த்தை, திருநற்கருணை, கிறிஸ்தவ குழுமம் ஆகியவற்றின் அடிப்படையில் கிறிஸ்தவ வாழ்வை அமைப்பதற்கு, இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

மேலும், நம் அயலவருக்கு ஆற்றப்படும் ஒவ்வொரு அவமானம், காயம், அல்லது வன்முறை, படைத்தவரும், நம் இறைத்தந்தையுமான கடவுளையே புண்படுத்துவதாகும் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.