2018-05-07 16:38:00

உயிரை அன்புகூர்ந்து பாதுகாக்க முன்வருவதே உண்மை அன்பு


மே,07,2018. நம் ஒவ்வொருவரின் அன்பும், தனக்கேயுரிய சுவையையும் துணிச்சலையும் இழக்காதிருக்க வேண்டுமெனில், நாம் இயேசுவின் அன்போடு நிலைத்திருக்க வேண்டியது அவசியம் என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையை, இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தின் அடிப்படையில் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தந்தையாம் இறைவனிலிருந்து நமக்கு வரும் அன்பில் நாம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமெனில், நம் சுயநலப்போக்குகளையும், பாவங்களையும், விட்டு விலகவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அன்பு என்பது, நம் ஒவ்வொரு நாள் வாழ்வு, நடவடிக்கைகள் மற்றும் மனப்போக்குகள் வழியாக பெறப்படுகிறது, இல்லையெனில், அது வெறும் மாயையாகிவிடும் என உரைத்த திருத்தந்தை, 'நான் உங்களை அன்புகூர்ந்தது போல், நீங்கள் ஒருவரையொருவர் அன்புகூரவேண்டும்' என்ற இயேசுவின் கட்டளைப் பின்பற்றப்பட வேண்டும் என்றார்.

நம் பயணத்தில், நம்மோடு உடன் வர விரும்பும் அனைவரையும் நாம் அன்புகூர்ந்து, நம் அன்பை அவர்களோடு பகிர்ந்து, இயேசுவின் அன்பில் அவர்களை கொண்டுவந்து இணைக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் இவ்வுலக வாழ்வின் முக்கியக்கூறாக, அடுத்தவர் மீது நாம் காட்டும் அன்பு இருக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியோர், நோயாளிகள், கருவில் வளரும் குழந்தைகள் என ஒவ்வொருவரும் அன்பு கூரப்பட்டு பாதுகாக்கப்படுவதே உண்மையான அன்பு எனவும் கூறினார்.

தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், மத்திய ஆப்ரிக்க நாட்டிற்காக செபிக்குமாறு அழைப்பு ஒன்றையும் விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.