2018-05-07 14:25:00

வாரம் ஓர் அலசல் – உயரே ஒளிரும் விளக்குகள்


மே,07,2018. பாட்னாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ்குமார் மிஸ்ரா அவர்கள், அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் பொறியியலாளர். படிப்பை முடித்ததும், நான்கு ஆண்டுகள் நியூயார்க்கில் தகவல் தொழில் நுட்பப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். ஆண்டுக்கு ஐம்பது இலட்சம் ரூபாய் நிகர வருமானம் என்றிருந்த நிலையில், வேலை சலிப்புத் தட்ட, நாட்டுக்குச் சேவை செய்யும் விதத்திலான ஒரு பணியைச் சொந்த நாட்டிலேயே தேர்ந்தெடுத்தால் என்ன? எதற்காகத் தாய்நாட்டையும், பெற்றோரையும் விட்டு விட்டு இங்கே வந்து, செய்த வேலையையே மீண்டும், மீண்டும் செய்துகொண்டு சுவையின்றி நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றவே, அமெரிக்காவில் வேலையை விட்டு விட்டு 2011ம் ஆண்டில் இந்தியா திரும்பினார் சந்தோஷ் மிஸ்ரா. இவரது தந்தையும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்பதால், இவரது விருப்பத்திற்குத் தடை சொல்லவில்லை. இந்தியக் குடிமைப் பணிகளில் தேர்வானால் அதன் மூலமாகவும் நாட்டுக்குச் சேவை செய்ய முடியும் என்று முடிவெடுத்து இந்தியா திரும்பியதும் முதன்முறையாக குடிமைப் பணித்தேர்வெழுத விண்ணப்பித்தார் சந்தோஷ். தேர்வில், முதல் முறையே தேர்ச்சிபெற்று, ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றத் தேர்வானார் சந்தோஷ் குமார் மிஸ்ரா.

சந்தோஷ் குமார் மிஸ்ரா அவர்கள், பீகாரின் அமோரா மாவட்டத்தில் பணியாற்றியபோது ஐந்தாம் வகுப்பு மாணவனொருவன் வினோதமான புகாருடன் அவரைச் சந்தித்தான். அச்சிறுவன் தனது புகாரில் “வகுப்புத் தோழன் ஒருவன் தொடர்ந்து 15 நாட்களாகப் பள்ளிக்கு வருவதில்லை என்றும், காவல்துறையினர் உடனடியாக அவனைக் கண்டுபிடித்து, அவன் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பதைக் கேட்டறிந்து சொல்ல வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தான். புகாரளித்த சிறுவனை நிமிர்ந்து பார்த்த சந்தோஷ் அவர்களுக்கு அந்தச் சிறுவனின் முகத்தில், அப்பழுக்கற்ற தூய நட்புணர்வும் நண்பனைத் தேடும் ஏக்கமும் தென்படவே, சிறுவன் அளித்த புகார்தானே என அதை ஒதுக்கி வைக்காமல், அந்த புகாரை எடுத்துக் கொண்டு சிறுவனின் நண்பனைத் தேடத் துவங்கினார். சிறுவனின் நண்பன் காணாமல் போகவில்லை. அவன், தனது தந்தைக்கு உதவுவதற்காக இனிப்பகம் ஒன்றில் பலகாரம் செய்ய உதவி வருவது தெரியவந்தது. இந்த விடயத்தை தனது நேரடி ஆய்வில் கண்டறிந்த சந்தோஷ் அவர்கள், நேராக அவனது தந்தையை அணுகி, ‘இந்த வயதில் இவன் செல்ல வேண்டியது பள்ளிக்குத்தானே தவிர பலகாரக் கடைக்கு அல்ல என்று கூறி சிறுவனின் படிப்புச் செலவுக்குத் தானே பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று முதல் அச்சிறுவன் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினான். இந்த நாட்டில் ஏதோ ஒரு சிறுவன் மட்டுமே இப்படி பாதிக்கப்படுவதில்லை. இது சங்கிலித் தொடர்போல பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது எனச் சிந்தித்தார் சந்தோஷ் குமார். எனவே ஆரம்பக் கல்வியை அரைகுறையாக நிறுத்தவேண்டிய கட்டாயத்திலிருக்கும் சிறுவர்களைக் கண்டறிந்து, அவர்களது கல்வி தடைபடாமல் இருப்பதற்கு உதவத் தீர்மானித்தார் அவர். தற்போது தனது ஐபிஎஸ் பணி நேரம் முடிந்து ஓய்வு நேரங்களில் பள்ளிச் சிறுவர்களுக்கு கணிதப் பாடம் எடுத்து வருகிறார். அத்துடன், இவர், தான் பணியாற்றும் அமோரா மாவட்டத்தின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணித ஆசிரியரும்கூட. நேரம் கிடைக்கும் போதெல்லாம், இந்த ஐபிஎஸ் அதிகாரி சாக்பீஸும், கையுமாக பள்ளிக்கூடத்தில் நுழைந்து விடுகிறாராம். இப்போதெல்லாம் சந்தோஷ் அவர்களின் வகுப்பறைகளில் எந்த மாணவரும் பாதியில் படிப்பை புறக்கணித்து விட்டு குடும்பக் கஷ்டம் என்று சிறுதொழில்களில் எடுபிடியாக ஈடுபடுத்தப்படுவதில்லையாம். சந்தோஷ் அவர்களும், வகுப்பறைகளில் தனது மாணவர்களின் எந்த வேண்டுகோளையும் புறக்கணிப்பதில்லையாம். கணிதமென்றாலே அஞ்சும் சிறுவர்களைக்கூட ஜிலேபி தருவதாகக் கூறி சமாதானப்படுத்தி ஆர்வத்துடன் கணிதம் பயில் வைக்கிறார் என்கிறார்கள். அது மட்டுமல்ல ஆரம்பப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு நோட்டு, பென்சில்கள், புத்தகப்பைகள் போன்றவற்றையும் இவர் வாங்கித் தருகிறாராம். ஐபிஎஸ் அதிகாரியாக மாநிலத்தில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பது தனது தொழிற்கடமை. ஆனால் இப்படி பொதுச்சேவை செய்வதென்பது தனது சமூகக் கடமைகளில் ஒன்று என்பதில் தெளிவாக இருக்கிறார் சந்தோஷ் குமார் மிஸ்ரா.

ஓர் எழுத்தாளர் சொல்வதுபோன்று, வெளிச்சத்தை தேடி போராடிக்கொண்டிருப்பவர்கள், கடினமான காலகட்டங்களில் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். நம்மால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் இந்த பிரபஞ்சம் நமக்குச் சாதகமாகவே நிலைமைகளைத் தயார் செய்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். இந்தக் கூற்றுக்கு இலக்கணமாக திகழ்பவர்கள் சிலர். எப்போதுமே வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து மேலெழும்பி வெற்றிக்கொடி நாட்டுபவர்களின் வாழ்வு, சிலிர்ப்பூட்டும் ஒன்றாகும். எந்த சூழ்நிலையிலும் தளராத விடாமுயற்சி ஒன்றே, கண்பார்வையற்ற ஸ்ரீகாந்த் பொல்லா (Srikanth Bolla) அவர்களின் இந்த சாதனைக்கு காரணம் என்று இணையதளங்கள் அவரைப் பாராட்டியுள்ளன. மாற்றுத்திறனாளியான ஸ்ரீகாந்த் பொல்லா அவர்கள், நான் சந்தித்த சவால்களே என் வாழ்வுக்கு வாய்ப்புக்களாக அமைந்தன என்கிறார். ஆந்திர மாநிலத்தின் சீதாராமபுரம் என்ற கிராமத்தில், வறிய விவசாயக் குடும்பத்தில், 1992ம் ஆண்டு, கண்பார்வையின்றி பிறந்த இவர், தற்போது, ஹைதராபாத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பற்ற (Eco-friendly) பேக்கேஜிங் பொருட்களைத் தயார் செய்யும் பொல்லான்ட் (Bollant Industries)  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO).  இவர், தற்போது தனது நிறுவனத்தில் எழுபது விழுக்காட்டினருக்குமேல் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கி தனது நிறுவனத்தை நிமிர்ந்து நிற்கச் செய்து, வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஏறத்தாழ ஐம்பது கோடிக்கு முதலாளியான இவருக்கு இந்தியாவில் நான்கு மாநிலங்களின் நான்கு முக்கிய நகரங்களில் உற்பத்திக் கூடங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று முழுக்க முழுக்க சூரிய மின்சக்தியில் இயங்கும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு ஏப்ரலில் Forbes இதழ், இவரை, ஆசியாவில் இளம் செல்வந்தர்கள் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்தியது. அவ்வாண்டில் இந்தப் பட்டியலில் மூன்று இந்தியர்களே இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலகில் தன்னையே பெரும் பேறுபெற்றவராகக் கருதும் ஸ்ரீகாந்த் பொல்லா அவர்கள், தான் இப்போது கோடீஸ்வரன் என்பதால் அல்ல, மாதம் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்த நிலையிலும், தன்னை அன்புடன் வளர்த்து ஆளாக்கிய எழுதப் படிக்கத் தெரியாத தன் பெற்றோர்களை நினைத்து என்கிறார். இந்த உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் என் பெற்றோர்கள்தான் என்கிறார் இவர். ஸ்ரீகாந்த் பொல்லா அவர்கள், பார்வையற்ற குழந்தையாகப் பிறந்தபோது, அக்கம் பக்கத்தினர் அவரின் பெற்றோரிடம், இவனை வளர்த்து, அவனைக் கஷ்டப்படுத்தி, நீங்களும் கஷ்டப்படுவதைவிட, அவனை இப்போதே கொன்றுவிடுங்கள்", "அவனால் உங்களுக்கு என்ன பயன்? அவன் பாவம் செஞ்சிருக்கான். அதனால்தான் கண்பார்வையின்றி பிறந்திருக்கான்" என்றெல்லாம் கூறினார்களாம். ஆனால் பிறந்து,  இருபத்து மூன்று ஆண்டுகள் சென்று, உலகமே வியந்து பாராட்டும் விதத்தில் உயர்ந்து நிற்கும் ஸ்ரீகாந்த் அவர்கள், "உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று இந்த உலகம் என்னிடம் சொன்னால், இல்லை என்னால் எதுவும் முடியும் என்று திருப்பி சொல்வேன்" என்கிறார் தன்னம்பிக்கையுடன். செல்வம் என்பது பணத்திலிருந்து வருவதல்ல. அது மகிழ்ச்சியிலிருந்து வருவது என்று சொல்கிறார் ஸ்ரீகாந்த் பொல்லா. ஸ்ரீகாந்த் பொல்லா என இணையத்தில் (rightmantra,  googlegroups) இட்டால் அவரைப் பற்றிய தகவல்கள், ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளில் மளமளவென வந்து குவிகின்றன. ஸ்ரீகாந்த் பொல்லா அவர்கள், ஒரு நிகழ்வில் தன் பள்ளிப் படிப்பு பற்றிக் கூறியபோது, வகுப்பில் நான் ஒருவன் இருப்பதையே யாரும் பொருட்படுத்தியதில்லை. கடைசி பெஞ்சில்தான் அமரவைக்கப்பட்டேன். உடற்பயிற்சி வகுப்பில்கூட கலந்துகொள்ள எனக்கு அனுமதி கிடையாது. இந்த உலகத்திலேயே நான்தான் ஏழை மாணவன் என்று அப்போது நினைத்தேன். இந்த எண்ணம், வறுமையின் காரணமாக அல்ல, ஆனால் தனிமையின் காரணமாக என்று சொல்லியுள்ளார். வயல்களில் வேலை செய்துவந்த அவரின் பெற்றோர், மகனைப் படிக்க வைக்க விரும்பினர். எனவே, தங்கள் கிராமத்திற்கு அருகே, அதாவது குறைந்தது ஐந்து கி.மீ தூரத்திலிருந்த பள்ளியில் மகனைச் சேர்த்துவிட்டனர். சிறுவன் ஸ்ரீகாந்த், பெரும்பாலும் நடந்தேதான் பள்ளி சென்றுள்ளான். பள்ளியில் அவனுக்கு எதுவும் கற்றுத் தரப்படுவதில்லை என்பதை உணர்ந்த ஸ்ரீகாந்தின் தந்தை, ஹைதராபாத்தில் உள்ள சிறப்பு பள்ளியில் அவனைச் சேர்த்தார். அங்கு காட்டப்பட்ட அன்பாலும் அக்கறையாலும், விளையாட்டு, படிப்பு என எல்லாவற்றிலும் ஸ்ரீகாந்த் தலைசிறந்து விளங்கினார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் LEAD INDIA திட்டத்திலும் இணைந்தார் ஸ்ரீகாந்த். "நீ  என்னவாக வரவேண்டும் என்று விரும்புகிறாய்?" என்று அப்துல் கலாம் அவர்கள் கேட்டபோது, "இந்தியாவின் பார்வைத்திறன் சவால் கொண்ட முதல் குடியரசுத் தலைவராக நான் வர விரும்புகிறேன்!" என்ற சொன்னவர் இந்த ஸ்ரீகாந்த். இவர், பத்தாம் வகுப்பில் 90 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தாலும்,  மேல்நிலை வகுப்பில், அவர் விரும்பிய அறிவியல் பிரிவு அவருக்கு மறுக்கப்பட்டது. அதனால் கல்வித் துறைக்கு எதிராக வழக்கு தொடுத்து ஆறு மாதங்கள் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றார். அனைத்து விதமான பாடப் புத்தகங்களையும் வாங்கி அவற்றை ஒலி வடிவில் மாற்றிக்கொண்டார். இரவு பகலாக படித்து +2 தேர்வில் 98 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றார். பின்னர், புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனமான Birla Institute of Technology and Science, Pilani உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் B.Tech படிக்க விண்ணப்பித்தார். நுழைவுத்தேர்வுக்குக்கூட அனுமதி கிடைக்கவில்லை. எனவே இணையத்தில் தன்னைப் போன்று இருப்பவர்கள் பொறியியல் படிக்க என்ன செய்யலாம் என்று தேடினார். அதன் பயனாக, பதினெட்டாவது வயதில், அமெரிக்காவில் நான்கு கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தது. ஆயினும், MIT எனப்படும் புகழ்பெற்ற Massachusetts Institute of Technology யில் சேர்ந்தார் அவர். இதன் வழியாக, அங்கு அனுமதிக்கப்பட்ட, முதல் சர்வதேச பார்வையற்ற மாணவர் இவர் என்கிற பெருமையையும் பெற்றார் ஸ்ரீகாந்த் பொல்லா.

அமெரிக்காவில் வெற்றிகரமாக தனது பொறியியல் படிப்பை முடித்தவுடன்,  இந்தியா திரும்பிய ஸ்ரீகாந்த் பொல்லா அவர்கள், ஒரு மாற்றுத்திறனாளி ஏன் கடைசி பெஞ்சில் உட்கார வைக்கப்படவேண்டும்?  இந்திய மக்கள் தொகையில் உள்ள பத்து விழுக்காட்டு மாற்றுத்திறனாளிகள் ஏன் பொருளாதாரத்தில் எப்போதுமே பின்தங்கியிருக்கிறார்கள்? அவர்களும் தலைநிமிர்ந்து சுயசார்புடன் வாழும்வண்ணம் ஏன் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை? போன்ற கேள்விகளைத் தனக்குத்தானே எழுப்பினார். அதன் பயனே இன்று இந்த நிலைக்கு உயர்ந்து நிற்கிறார் ஸ்ரீகாந்த். மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குரிய சமூக, பொருளாதார அங்கீகாரத்தை வழங்கக்கூடிய ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். ஹைதராபாத்தில் Samanvai மையத்தில் Braille முறையில் அச்சடிக்கும் கருவிகளை அமைத்து, மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், ரவி மந்தா என்கிற முதலீட்டாளர், ஸ்ரீகாந்த் அவர்களைச் சந்தித்தபோது, அவரிடம் இருந்த வர்த்தக அறிவையும் நுணுக்கத்தையும் கண்டு வியந்து, அவரை நம்பி பலகோடிகள் முதலீடு செய்ய முன்வந்தார். ஆரம்பத்தில், ஹைதராபாத்தில், தகரத்தில் கூரை வேய்ந்த ஒரு சாதாரண தொழில்பேட்டையில் மூன்று இயந்திரங்களும், ஏறக்குறைய எட்டுப் பேரும் பணிபுரிந்தனர். இன்று அது பொல்லான்ட் நிறுவனமாக உயர்ந்து நிற்கின்றது.

கருணை என்பது, ஒருவரை வாழவிடுவது, வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்துவது, அவர்களைத் தன்னிறைவு பெறச்செய்வது என்று விளக்கம் சொன்னார், பிறவியிலேயே பார்வையிழந்த, பொல்லான்ட் நிறுவன தலைமை அதிகாரி, ஸ்ரீகாந்தா பொல்லா. கருணையுடன் மற்றவர்களை நடத்தி அவர்கள் முன்னேற உதவுங்கள். அவர்களை அரவணைத்து அவர்கள் தனிமையைப் போக்குங்கள். பிறருக்கு நல்லதையே செய்யுங்கள். அது உங்களிடம் திரும்ப வரும். நீங்கள் இந்தப் பூமியைவிட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் ஆகியவற்றை விட்டுச்செல்லுங்கள். அது உங்கள் தலைமுறையை நன்றாக வழிநடத்தும். ஒரு மனிதருக்கு உதவுவது, முழு உலகையும் மாற்றாமல் இருக்கலாம். ஆனால், அந்த உதவி, ஒருவருக்காக, உலகை மாற்றலாம் என்றெல்லாம் பெரியோர் சொல்கின்றனர். இந்த அறிவுரைகளை தங்கள் வாழ்வால், வாழ்ந்து காட்டுகின்றவர்களை வாழ்த்துவோம். இவர்கள் உயரத்தில் ஒளிரும் சுடர்கள். பிறரை வாழ வைக்கும், பிறர் வாழ வழிகாட்டும் விளக்குகள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.