2018-05-08 15:54:00

பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு திருப்பீட அவைக்கு...


மே,08,2018. பொதுநிலை விசுவாசிகள், குடும்பம் மற்றும் மனித வாழ்வை ஊக்குவிக்கும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டில் உருவாக்கிய புதிய திருப்பீடத் துறைக்கு, சட்ட விதிமுறைகள் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.

2016ம் ஆண்டு, ஆகஸ்ட்15ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் சுயவிருப்பத்தின்பேரில் (Motu Proprio) வெளியிட்ட “Sedula Mater” என்ற அறிக்கையில், பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவையை உருவாக்கினார்.

திருப்பீட பொதுநிலையினர் அவை, திருப்பீட குடும்ப அவை ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒன்றிணைத்து திருத்தந்தை இப்புதிய அவையை உருவாக்கினார். மேலும், பாப்பிறை வாழ்வு கழகம், இந்த அவையோடு தொடர்பு கொண்டுள்ளது. மேலும், திருமணம் மற்றும், குடும்பத்தின் அறிவியலுக்கான, திருத்தந்தை 2ம் ஜான் பால் பாப்பிறை இறையியல் கழகமும், இந்த அவையோடு தொடர்புடையது.

திருப்பீட பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு அவைக்கு இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ள புதிய சட்ட விதிமுறைகள், மே 13, வருகிற ஞாயிறன்று பாத்திமா அன்னை விழாவன்று அமலுக்கு வருகின்றன.

இப்புதிய சட்ட விதிமுறைகளின்படி, இத்திருப்பீட அவை, மூன்று பிரிவுகளாக இல்லாமல், ஒரே அவையாகச் செயல்படும். திருஅவையிலும், உலகிலும் பொதுநிலை விசுவாசிகள் ஊக்குவிக்கப்படவும், இக்கால உலகின் சவால்களின் மத்தியில் இளையோர் ஊக்கவிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவமும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

இத்திருப்பீட அவையின் உறுப்பினர்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, பல்வேறு துறைகளைச் சார்ந்த பொதுநிலை விசுவாசிகள், திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் ஆகிய எல்லா நிலைகளையும் சார்ந்தவர்களாய் இருப்பார்கள் என்றும் இப்புதிய விதிமுறைகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.