சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம் : திருஅவையின் போதனைகளுக்கு...

நீசேயா பொதுச்சங்கம் - RV

09/05/2018 15:15

மே,09,2018. உலகில் கிறிஸ்தவம் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில், அவ்வப்போது சிலர், திருஅவையின் போதனைகளுக்கு எதிராகவும், விசுவாச உண்மைகளை தவறென்றும் போதித்து வந்தனர். இச்செயல், கிறிஸ்தவர்களைக் குழப்பி, அவர்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தி வந்தது. இதனாலே, தீத்து தனது திருமடலில், மடத்தனமான விவாதங்கள், மூதாதையர் பட்டியல்கள் பற்றிய ஆய்வுகள், போட்டி மனப்பான்மை, திருச்சட்டத்தைப் பற்றிய சண்டைகள் ஆகியவற்றை விலக்கு. இவை பயனற்றவை, வீணானவை. சபையில் பிளவு ஏற்படக் காரணமாயிருப்போருக்கு ஒருமுறை, தேவையானால் இன்னொரு முறை அறிவு புகட்டிவிட்டுப் பின் விட்டுவிடு. இப்படிப்பட்டவர் நெறிதவறியோர் என்றும் தங்களுக்கே தண்டனைத் தீர்ப்பளித்துக்கொண்ட பாவிகள் (தீத்து3,9-11) என்று சொல்கிறார். கடவுள் ஒருவரே, அவர், தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆள்களாய் இருக்கின்றனர் என்பதே கிறிஸ்தவ மறையுண்மையாகும். ஆனால், இந்த மூவொரு கடவுள் பற்றிய பேருண்மை மீது பலருக்கு அவ்வப்போது சந்தேகம் எழுந்தது. எடுத்துக்காட்டாக, தெயோதோத்துஸ்(Theodotus), சபெலியுஸ் (Sabellius), தியோனேஷியஸ் போன்றோர், மூவொரு கடவுள் பற்றிய பேருண்மைக்கு முரணாகப் பேசினர்.

தெயோதோத்துஸ் என்பவர், ஏறத்தாழ கி.பி.190ம் ஆண்டில், பைசாண்டைனிலிருந்து உரோம் நகருக்கு வந்தார். தோல் வர்த்தகராகிய இவரும், இவரைச் சார்ந்தவர்களும், வானகத்தந்தை ஒருவரே உண்மையான கடவுள் என்று நம்பினர். இயேசுவிடம் இறைத்தன்மை கிடையாது. ஏனைய மனிதனைப் போல அவரும் மனிதன்தான். இயேசுவிடமிருந்த இறைவல்லமை, அவர் திருமுழுக்குப் பெற்றபோது, தூய ஆவியாரால் கிடைத்தது. அதேபோல் அவரது உயிர்ப்பும் தூய ஆவியாரின் வல்லமையால் நிகழ்ந்தது என்று நம்பி போதித்தார் தெயோதோத்துஸ். எனவே திருத்தந்தை விக்டர், இவரை,கி.பி. 198ம் ஆண்டில் திருஅவையைவிட்டு புறம்பாக்கினார். மேலும், மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சபெலியுஸ் என்பவர், வட ஆப்ரிக்காவின் லிபியாவைச் சேர்ந்தவர். அருள்பணியாளரும், இறையியலாளருமான இவர், உரோமையில் கற்பித்து வந்தார் என நம்பப்படுகிறது. கடவுள் ஒருவரே. அவர் பிரிக்க முடியாதவர். தந்தை, மகன், தூய ஆவியார் என்பவர்கள், ஒரே இறைமனிதரின் வெளிப்பாடுகள் என போதித்தார் எனச் சொல்லப்படுகின்றது. எனவே இவரை திருத்தந்தை முதலாம் கலிஸ்துஸ் அவர்கள், கி.பி.220ம் ஆண்டில் திருஅவையைவிட்டு விலக்கினார்.

அலெக்சாந்திரியாவின் ஆயர் தியோனேஷியஸ் (Dionysius) என்பவரும் மூவொரு கடவுள் பேருண்மை பற்றிய சந்தேகத்தை எழுப்பினார். கி.பி.259ம் ஆண்டில், திருத்தந்தை தியோனேஷியஸ் அவர்கள், அலெக்சாந்திரியாவின் ஆயர் தியோனேஷியஸ் அவர்களுக்குக் கடிதம் எழுதி, சபெலியுஸ், மார்சியோன் போன்றோரின் தப்பறைக் கொள்கைகளுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தார். கி.பி.325ம் ஆண்டில் நீசேயாவில் நடத்தப்பட்ட பொதுச்சங்கத்தில், மூவொரு கடவுள் பேருண்மை உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் அலெக்சாந்திரியாவின் ஆயர் தியோனேஷியஸ் அவர்கள், தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.

கி.பி.260ம் ஆண்டில்,  அந்தியோக்கியாவின் ஆயராகப் பணியேற்ற பவுல் (Paul of Samosata) அவர்கள், கிறிஸ்து கடவுளின் உண்மையான மகன் அல்ல எனப் போதித்தார். இதனால், ஆயர் பவுல் அவர்கள், அந்தியோக்கியாவில் நடைபெற்ற பொதுச்சங்கங்களில் கி.பி.264 மற்றும் 268ம் ஆண்டுகளில் கேள்விகள் கேட்கப்பட்டு, அவரின் கிறிஸ்து இயல் கொள்கைக்கு எதிராக எச்சரிக்கப்பட்டார். இவ்வாறு அக்காலத்தில் அவ்வப்போது போதிக்கப்பட்ட தப்பறைகளுக்கு எதிராகக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு திருஅவையின் மறையுண்மைகள் உறுதிசெய்யப்பட்டு காக்கப்பட்டன.

Mani என்பவர் கிறிஸ்தவத்திற்கு எதிராகப் போதித்தவை மனிக்கேயிசமாகும். கி.பி.216ம் ஆண்டில் தற்போதைய ஈரான் நாட்டில் பிறந்தவர் மானி. உலகில் ஒளி அரசு, இருள் அரசு என, இரு அரசுகள் உள்ளன. ஒளி அரசு கடவுளுடையது. இருள் அரசு தீயவனுடையது. ஒளிக்கும் இருளுக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. இதில் மனிதர் சிக்கியுள்ளனர். தீயவன் ஆதாமைப் பிறப்பித்தான். ஆதாமின் வாரிசான மனிதரிடம், ஒளியின் சில சுடர்கள் இருளில் மறைந்துள்ளன. இவ்வொளிச்சுடரை மீட்க இயேசுவும், பவுலும் அனுப்பப்பட்டனர். இதனை அடைய மனிதர் அனைத்தையும் துறக்க வேண்டும். உலகில் நன்மைக்கும், தீமைக்கும் இடையே போராட்டம் நடக்கின்றது. இவ்வாறு போதித்த மானியின் போதனைகள் விரைவில், அரமேயம்–சிரிய மொழி பேசும் பகுதியில் பரவின. 3ம் மற்றும் 7ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில், கிழக்கே சீனா முதல், மேற்கே, மேற்கு உரோமைப் பேரரசு வரை, Mani என்பவர் ஆரம்பித்த மனிக்கேய ஆலயங்களும், நூல்களும் பரவின. இது கிறிஸ்தவத்திற்குக் கடும் போட்டியாக இருந்தது. மனிக்கேயிசம் மேற்குலகில் விரைவில் மறைந்தாலும், சீனாவின் தென் பகுதியில், 14ம் நூற்றாண்டுக்குப் பின்னரே மிங் பரம்பரை பேரரசு காலத்தில் மறைந்தது எனச் சொல்லப்படுகிறது.

ஹிப்போ நகர ஆயர் புனித அகுஸ்தீன், முதலில் மனிக்கேய தப்பறைக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர். ஆனால் அக்கொள்கைகள் அவரின் உண்மையான ஆன்மீகத் தேடலுக்குப் பதில் தரவில்லை. மிலான் நகர ஆயர் புனித அம்புரோஸ் அவர்களின், திருவிவிலியம் பற்றிய மறையுரைகளே அவருக்கு நிறைவளித்தன. பின்னர் புனித அகுஸ்தீன் தனது முப்பதாவது வயதில் மனம் திரும்பி திருமுழுக்குப் பெற்றார். பின்னர் மனிக்கேயக் கொள்கையாளர்களை தம் வாதங்களால் தோற்கடித்தார் புனித அகுஸ்தீன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

09/05/2018 15:15