2018-05-09 16:06:00

86 ஆயிரம் ஹொண்டூராஸ் மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆயர்கள்


மே,09,2018. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்கின்ற ஆயிரக்கணக்கான ஹொண்டூராஸ் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு அனுமதி புதுப்பிக்கப்படாது என்ற அரசின் அறிவிப்பு, மனிதாபிமானமற்றது என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசின் இந்த அறிவிப்பால், அந்நாட்டில் வாழ்கின்ற ஏறத்தாழ 86 ஆயிரம் ஹொண்டூராஸ் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கும்வேளை, அவர்கள்மீது இரக்கம் காட்டப்படுமாறு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் குடிபெயர்வோர் பணிக்குழுவின் இயக்குனர் விண்ணப்பித்துள்ளார்.

இயற்கைப் பேரிடர், கொள்ளை நோய், சமூகப் பதட்டநிலைகள் போன்ற காரணங்களால் தங்கள் சொந்த நாடுகளை விட்டு அடைக்கலம் தேடும் மக்களுக்கு, TPS (Temporary protected status) எனப்படும், தற்காலிக பாதுகாப்பு விதிமுறையின் அடிப்படையில், தங்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. மேலும், இந்த விதிமுறையின்படி, அம்மக்கள், சட்டமுறைப்படி அமெரிக்க ஐக்கிய நாட்டில் வேலை செய்யலாம்.

இந்த விதிமுறையின்படி அமெரிக்காவில் வாழ்கின்ற ஹொண்டூராஸ் மக்களுக்கு, வழங்கப்பட்டுள்ள அனுமதி வரும் ஆண்டுகளில் புதுப்பிக்கப்படாது எனவும், அவர்களைத் தொடர்ந்து, எல் சால்வதோர், நேபாளம், ஹெய்ட்டி, சூடான், நிகராகுவா போன்ற நாடுகளின் மக்களுக்கும் அனுமதி புதுப்பிக்கப்படாது எனவும் சொல்லப்படுகின்றது.

ஹொண்டூராஸ் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி, இன்னும் 18 மாதங்களில், அதாவது 2020ம் ஆண்டு சனவரி 5ம் தேதியோடு நிறைவடைகின்றது என்பதால், அமெரிக்க ஆயர்கள் சார்பில், அம்மக்களுக்காக விண்ணப்பித்துள்ளார், அமெரிக்க பேரவையின் குடிபெயர்வோர் பணிக்குழுவின் இயக்குனர், William A. Canny. 

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.