2018-05-09 15:03:00

இமயமாகும் இளமை : சூரிய உழவு இயந்திரம், இளைஞர்களின்..


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள மைலம் பொறியியல் கல்லூரி மின்னனுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் நான்காம் ஆண்டு பயிலும் செல்வன் ப்ரேம்நாத், வெற்றிவேல், அருண், சிவராமன் ஆகிய நான்கு மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, துணை பேராசிரியர் ராஜபார்த்திபன் உதவியோடு சூரிய மின்சக்தியால் ஏர் உழவும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர். இந்த இயந்திரமானது முழுவதுமாக சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்தி இயங்குகிறது. இதில் எரிபொருள் ஏதும் பயன்படுத்தப்படாதலால் சுற்றுச்சூழல் பாதிப்பு தடுக்கப்படுகிறது. இக்காலத்தில் உழவு செய்யப்படும் டிராக்டர் எடை மிகவும் அதிகம் என்பதால் அதனை நிலத்தில் பயன்படுத்தும்போது நிலத்தின் தன்மை பாதிக்கப்படுகிறது. எனவே இந்த மாணவர்கள் வடிவமைத்துள்ள இயந்திரமானது டிராக்டரைவிட எடை குறைவானது. இதனால் நிலத்தின் தன்மை பாதுகாக்கப்படுகின்றது. முழுவதுமாக சூரிய மின்சக்தியால் இயங்கும் இந்த இயந்திரம் ரிமோட்டின் மூலமாக எளிதாக இயக்கப்படுகிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை யார் வேண்டுமானாலும் இயக்கி, எவ்வளவு நிலத்தை வேண்டுமானாலும் உழவு செய்யலாம். இந்த இயந்திரத்தை வடிவமைக்க கிட்டதட்ட நான்கு முதல் ஐந்து இலட்சம் ரூபாய் வரை செலவாகும். இந்த இயந்திரத்தில் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. அது சூரிய சக்தியை சேகரித்து நிலத்தை உழுவதற்கு பயன்படுகிறது. தொடர்ந்து நான்கு மணிநேரம் வரை உழலாம். ஒரு சாதாரண விவசாயி டிராக்டர் மூலம் உழுவதால் ஆகும் செலவைவிட இது குறைவான செலவாகும். இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதால் டீசல் செலவு மற்றும் இதர எரிபொருள் செலவுகள் குறைக்கப்படுகின்றன. விவசாயத்தை முழுவதுமாக மேம்படுத்துவதற்கான ஓர் ஆரம்பமாக, இந்த கல்லூரி மாணவர்கள் இந்த ஏர் உழவு இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு, படித்த இளைஞர்களும் விவசாயம் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை உருவாக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.

ஆதாரம் : விகடன் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.