2018-05-09 15:58:00

உலக காரித்தாஸ் அமைப்பின் 'பயணத்தைப் பகிர்வோம்'


மே,09,2018. புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றதாரர்களைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் பற்றி அறிந்து, அவர்களுடன் உணவைப் பகிர்ந்து வாழ்வதை, சமூகங்கள் மத்தியில் ஊக்குவிக்கும் விதமாக, அகில உலக காரித்தாஸ் அமைப்பு, உலகளாவிய நடவடிக்கை ஒன்றின் காணொளிச் செய்தியை இப்புதன்கிழமையன்று வெளியிட்டுள்ளது.   

'பயணத்தைப் பகிர்வோம்' என்ற தலைப்பில், அகில உலக காரித்தாஸ் அமைப்பு ஆரம்பித்துள்ள, ஒருவார கொள்கை பரப்பு நடவடிக்கை, இவ்வாண்டு, வருகிற ஜூன் 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை இடம்பெறுகின்றது.

காரித்தாஸ் அமைப்பின் இந்த ஒரு வார நடவடிக்கைக்கு உதவும் விதத்தில், வத்திக்கான் செய்திகள், இந்தக் காணொளியைத் தயாரித்துள்ளது. இந்த நடவடிக்கை, உலக காரித்தாசின், 165 கிளை அமைப்புகளிலும் கடைப்பிடிக்கப்படும்.

கலாச்சாரச் சந்திப்பை ஊக்குவிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விடுத்த அழைப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக, அகில உலக காரித்தாஸ் அமைப்பு, 'பயணத்தைப் பகிர்வோம்' என்ற கொள்கை பரப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சி, 2017ம் ஆண்டு செப்டம்பரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

'பயணத்தைப் பகிர்வோம்' எனப்படும், இந்த ஒரு வார நடவடிக்கை குறித்து, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், உலகில் வாழும் நாம் அனைவரும் பயணிகள் என்ற உண்மையை உணர்வதற்கும், சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் இது மேற்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.