2018-05-09 15:09:00

நேர்காணல் – பாத்திமா அன்னையும், பக்தரும்


மே,10,2018. போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவுக்கு அருகில், Cova da Iria என்ற இடத்தில், 1917ம் ஆண்டு மே 13ம் நாளன்று, 10 வயது லூசியா, 7 வயது ஜசிந்தா, 9 வயது பிரான்சிஸ்கோ ஆகிய மூன்று சிறாரும் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கையில், அன்னை மரியா அவர்களுக்கு காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் 13ம் நாள்வரை ஆறு முறை அன்னை மரியா அச்சிறாருக்கு காட்சியளித்தார். மரியின் ஊழியர் சபை அருள்பணி அமல்ராஜ் அவர்கள், பாத்திமா அன்னை மரி காட்சி பற்றியும், அன்னை மரியா தன் வாழ்வில் புரிந்துள்ள அற்புதம் பற்றியும் இன்று பகிர்ந்துகொள்கிறார்.

மரியாளும் நானும்…

மரியாள் இயேசுவின் மற்றும் நம் ஒவ்வொருவருடைய தாயாக, சகோதரியாக, அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஒரு முன்மாதிரியான இயேசுவின் முதல் சீடத்தியாக, சிதறிப்போன சீடர்களை ஒன்றிணைத்து திருச்சபை என்னும் ஒரு புதிய குழுமத்தைக் கட்டியெழுப்பும் புரட்சிப் பெண்ணாக, நம்முடைய விசுவாச வாழ்விலே என்றும் நம் உடன் நடந்துவரும் ஒரு தோழியாக மற்றும் தேவையில் இருப்போருக்கு தேடிவந்து அவர்களின் துயர்துடைக்கும் ஒரு சாதாரண பெண்ணாக இருக்கின்றாள். இதை நாம் அவருடைய பூவுலக வாழ்வு மற்றும் திருச்சபையின் தாயாக இருந்து இன்றும் எண்ணற்ற மக்களின் துயர் துடைக்க, எங்கெல்லாம் மனிதம் சிதைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அந்த மக்களுடைய தேவைகளை அறிந்து செயலாற்ற, அவர்களின் துயர் துடைக்க துணையாக வருகின்ற மற்றும் அந்த மக்களுடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்து அவர்களின் ஆன்மீகத்தை வளரச்செய்கின்ற மரியன்னைக் காட்சிகளின் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். மனித வரலாற்றில் இதுநாள்வரை நடந்திருக்கின்ற, அனைவராலும் அறியப்பட்ட மற்றும் சிறப்பு வாய்ந்த 1531-ல் மெக்சிகோ நாட்டில் நடந்த கொதலூப்பே அன்னை மரியின் காட்சி, பிரான்சு நாட்டில், 1846-ல் நடைபெற்ற சலேத் அன்னை காட்சி மற்றும் 1858-ல் நடந்த லூர்து அன்னை காட்சி, போர்த்துக்கல் நாட்டில் 1917ல் நடந்த பாத்திமா அன்னை காட்சி, மற்றும் திருத்தந்தையால் முறைப்படி அங்கீகரிக்கப்படவில்லையென்றாலும், 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் வேளாங்கன்னி அன்னை காட்சி போன்ற மரியன்னையின் காட்சிகளே இதற்குச் சாட்சிகளாகும்.

அந்த வரிசையில், புனித பாத்திமா அன்னை காட்சியை அதன் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் சமயப் பின்னணியைக் கொன்டு ஆய்வுக்கு உட்படுத்துகின்றபொழுது நம்மால் இந்தக் கருத்தைப் மிகச்சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

போர்த்துக்கல் நாடு, பல நூற்றாண்டுகளாக அதனுடைய கிறிஸ்தவ விசுவாசத்திற்கும், சமயப் பணிக்கும் பெயர் போன ஒரு நாடு. இந்தியத் திருச்சயை வரலாறு ஒன்றே இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். இத்தகைய கிறிஸ்தவ பாரம்பரியத்தைக் கொண்ட இந்நாடு. 18ம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே தன்னுடைய சமூக மற்றும் சமய வாழ்விலே பல மாற்றங்களையும் சவால்களையும் அங்கு தோன்றிய ஒருசில அமைப்புக்கள் வழியாகச் சந்திக்கின்றது. அதனுடைய சமூக மற்றும் சமய கட்டமைப்பானது கேள்விக்கு உட்படுத்தப்பட்டு மதமும் அரசும் மோதிக்கொண்டன. இதனால், அந்த மக்களுடைய அரசியல், நம்பிக்கை, பொருளாதாரம் மற்றும் ஒழுக்க வாழ்வின் கட்டமைப்பானது உடைக்கப்பட்டு 1910 மற்றும் 1926ஆண்டுகளுக்கு இடையில் ஏறத்தாழ 16 அரசியல் புரட்சியைச் சந்தித்ததன் விளைவாக அந்நாடு அனைத்து நிலைகளிலும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும், 1914 முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் உலகப்போரும் மிகப்பெரும் தாக்கத்தை போர்த்துக்கல் நாட்டில் உண்டாக்கியது.

இக்காலகட்டத்தில்தான், 1917ம் ஆண்டு மே 13 அன்று, பாத்திமா நகரிலே, அன்னை மரியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ லூசியா ஆகிய மூன்று ஆடு மேய்க்கும் சாதாரண சிறுவர்களுக்குத் தோன்றி இந்த உலகம் அனைத்தும் உன்னதமான ஒரு வாழ்வை வாழ்ந்திட இறைவனின் திருச்செய்தியையும் அவருடைய திட்டத்தையும் அந்தக் குழந்தைகள் வழியாக நமக்குத் தருகின்றார். 

அந்தச் செய்தி:

•           செபமாலையை தினமும் செபிப்பது (ஏனென்றால், கல்வியறிவு அனைவருக்கும் கிடைக்காத அக்கால கட்டத்தில், அதுதான் சாதாரண பாமர மக்களுடைய நற்செய்தியாகும்),

மக்களுடைய தவறுகளுக்காக தவ மற்றும் ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்வது

தன்னுடைய சுயநலம் மற்றும் பேராசையினால் இவ்வுலகம் எதிர்கொள்ளவிருக்கின்ற பேரழிவு பற்றிய எச்சரிக்கை.

நம்மை எச்சரிக்கின்ற அதே நேரத்தில், இந்தப் பேரழிவிலிருந்து நாம் மீண்டெழ வேண்டுமென்றால் இவ்வுலகமானது மரியின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்கின்ற இறைவனுடைய ஆசையையும் வெளிப்படுத்தி அதே ஆண்டு அக்டோபர் 13 அன்று தன்னுடைய இறுதிக் காட்சியில் இவ்வுலகை அழிவிலிருந்து காத்திட தம் வழியாக இறைவன் செய்யவிருக்கின்ற அந்த மிகப்பெரிய அற்புதம் பற்றிய நம்பிக்கை தரும் செய்தியையும் தருகின்றார். அந்த இறுதிக் காட்சியும் அன்றைய நிகழ்வுகளும் போர்த்துக்கல் நாடு மீண்டும் கிறிஸ்துவை நோக்கி தன்னுடைய பார்வையைத் திருப்பி நற்செய்தியின் அடிப்படையில ஒரு சமத்துவ சகோதரத்துவ வாழ்வை கட்டியெழுப்ப வித்திட்டது.

இந்த நிகழ்வுகளையும் மரியன்னையின் காட்சியையும் பற்றிக் கூறுகின்றபோது ஏதோ பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்து முடிந்துவிட்ட ஒரு வரலாற்று நிகழ்வாக மட்டுமே நாம் பார்த்தோமென்றால் அது நமக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, மாறாக இந்த மரியன்னைக் காட்சிகள் எவ்வாறு நாம் மரியன்னை பக்தியிலும் ஆன்மீகத்திலும் வளர்ந்திட உதவுகின்றது என்று தன்னையே ஒரு சுய ஆய்வுக்கு உட்படுத்தும் போதுதான் நாம் மரியன்னை ஆன்மீகத்தில் வளர்ந்து உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக வாழ முடியும்.

இந்த நன்னாளிலே, என்னுடைய வாழ்வியல் அனுபவத்தையும் இங்கு உங்களோடு பகர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். நான் சிறுவயது முதல் என் தாயிடமிருந்து கற்றுக்கொண்ட செபமாலை பக்தியும், மரியின் ஊழியன் என்கின்ற வகையிலே, என் சபை எனக்குக் கற்றுத் தந்த மரியன்னை ஆன்மீகமும்தான் என் வாழ்வில் என்னை நல்வழிப்படுத்தியிருக்கின்றன. மரியின் ஊழியர் சபை பாரம்பரியத்தில் அன்றாட திருவழிபாட்டு நிகழ்வுகளில் மரியாளைப் பெருமைப்படுத்தி வருகின்றது. சிறப்பாக, ஒருவரை நாம் சந்திக்கிற வணக்கம் என கூறுவதற்குப் பதிலாக “மரியே வாழ்க” என்று அழைப்பது, சபையினுடைய இல்லங்ளையும் ஆலயங்களையும் அன்னை மரியாளுக்கு அர்ப்பணித்து அவர் பெயரை அந்த இல்லத்திற்கும் ஆலயத்திற்கும் வைப்பது, ஒவ்வொரு வழிபாட்டின் முடிவிலும் ஒரு மாதா பாடலோடு வழிபாட்டை முடிப்பது, சனிக்கிழமையை அன்னைக்கு அர்ப்பணித்து சிறப்பு திருப்பலி மற்றும் Angelus Domini, Regina Coeli போன்ற பழமையும் ஆழமான மரியியல் ஆன்மீகத்தை உள்ளடக்கியதுமான சிறப்பு வழிபாடுகளை நிறைவேற்றுவது. சிறப்பாக, சனிக்கிழமைக்கு முந்தின நாளான வெள்ளிக்கிழமையன்று அன்னைக்கு என்று ஒரு சிறப்பான “Blessed are you” அதாவது ஆசீர்வதிக்கப்பட்டவரே” என்கின்ற திருவிழிப்பு செபத்தை மரியின் ஊழிர்களாகிய நாங்கள் செபிப்போம். உண்மையிலேயே, விவிலியத்தில் மரியாளின் உயிர்த்துடிப்புமிக்க உரையாடலையும் (லூக்.1,26-38), அவருடைய புகழ்ச்சி மற்றும் புரட்சிப் பாடலையும் (லூக்.1,46-55),  இறுதியாக, சிலுவையின் அடியில் அவருடைய அழ்ந்த அமைதியையும் (யோவா.19,25-27) அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த செபங்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை: ஏனென்றால் அந்த செபங்கள்தான் என் வாழ்வில், குறிப்பாக மரியின் ஊழியனாக மற்றும் ஒரு குருவாக என் சீடத்துவ வாழ்வின் நோக்கையும் இலக்கையும் தீர்மானித்தன மற்றம் இன்றும் என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றது. அந்த செபம் இதுதான்.

ஆகட்டும் என்ற கன்னிக்கு

இறைவார்த்தையை இதயத்தில் ஏற்ற விசுவாசமுள்ள கன்னயே!

தூய ஆவியின் அழைப்பை உணர்ந்திடவும்,

எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் நாங்கள் கேட்கின்ற இறை வார்;தையிலும்

எங்கள் சகோதர சகோதரிகளின் வாழ்வில் பேசப்படுகின்ற இறைவார்த்தையிலும்

தெளிவற்ற, குழப்பம் நிறைந்த எங்கள் காலங்களிலும்

நாங்கள் வாழ்கின்ற எம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் பேசப்படுகின்ற இறைவார்த்தையிலும்

எங்கள் வாழ்வின் வழியை அறிந்து கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தாரும்.

புகழ்ச்சிப்பண் பாடிய கன்னிக்கு

நம்பிக்கையின் கன்னியே! புதிய காலத்தின் பிரகாசமான உடன்படிக்;கையே!

அமைதி, நீதி, விடுதலை நிறைந்த இறையரசை அறிவிக்க

உம்முடைய புகழ்பாடலைப் பாடி

எம் வாழ்வில் திருப்பயணங்களை நாங்கள் தொடரும்போது

எங்களோடு கூட வருவாய்;

3.சிலுவையடியில் நின்ற கன்னிக்கு

புனித மரியே! வியாகுலத் தாயே! வாழ்வோர் அனைவரின் அன்னையே

நாங்கள் உம்மை வாழ்த்துகிறோம்.

நீரே அந்த புதிய ஏவால்,

அன்பின் நிறைவிடமும் வாழ்வின் பிறப்பிடமுமான சிலுவையின் கீழ் நின்ற கன்னிப்பெண்.

சீடர்கிளின் அன்னையே,

பணிபுரிய எங்களைத் தூண்டிவிடும்.

இன்னும் எண்ணற்ற சிலுவையில் அறையப்பட்டுக்கொண்டிருக்கின்ற

மனுமகனின் சிலுவை அடியில்

உம்முடன் துணைநிற்க எமக்குக் கற்றுத்தாரும்.

ஓவ்வொருவரையும் சகோதர சகோதரிகளாக வரவேற்று

கிறிஸ்துவ அன்பை வாழும் சாட்சிகளாக எங்களை ஆக்கியருளும்.

இருளிலிருந்து விடுபட்டு

எல்லா மக்களுக்கும் ஒளியான, கிறிஸ்துவை பினபற்ற உதவியருளும்

ஓ பாஸ்காவின் புனித கன்னியே!

தூய ஆவியின் மகிமையே!

உம் ஊழியர்களின் செபத்தை ஏற்றருள்வீர் (அ.பணி அமல்ராஜ் மஊச)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.