2018-05-10 15:54:00

ஜெர்மன் கத்தோலிக்கருக்கு, திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி


மே.10,2018. ஜெர்மன் நாட்டின் Münster நகரில் நடைபெறும் 101வது ஜெர்மன் கத்தோலிக்க நாள் கொண்டாட்டங்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

மே 8, கடந்த செவ்வாய் முதல், 13, வருகிற ஞாயிறு முடிய நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் Münster நகரில் கூடியிருப்பது தனக்கு மகிழ்வைத் தருகிறது என்று திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

Katholikentag என்ற பெயரில் இயங்கிவரும் இவ்வமைப்பின் விருதுவாக்காக "அமைதியைத் தேடுதல்" என்ற சொற்கள் அமைந்துள்ளன என்பதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இச்சொற்கள், "தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு" (தி.பா. 34) என்ற திருப்பாடலின் சொற்களை எதிரொலிக்கின்றன என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

நான்கு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 50,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்கின்றனர் என்றும், மே 13ம் தேதி ஞாயிறன்று நடைபெறும் இந்த மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை, ஜெர்மன் ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Reinhard Cardinal Marx அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.