சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

ஒன்றிப்பை நோக்கிய பயணத்தில் மனம் தளராதிருப்போம்

திருத்தந்தை பிரான்சிஸ், செக் மற்றும் சுலோவாக்கிய பகுதியின், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை தலைவரான, பிரேசோவ் பேராயர் இராட்டிஸ்லாவ்

11/05/2018 15:17

மே,11,2018. கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே ஒன்றிப்பு என்பது, ஒரேமாதிரியான தன்மையுடன் விளங்குவதல்ல, மாறாக, தூய ஆவியாரில், பன்மைத்தன்மையில் ஒப்புரவுடன் இருத்தல் ஆகும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை தலைவர் ஒருவரிடம் கூறினார்.

செக் மற்றும் சுலோவாக்கிய பகுதியின், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை தலைவரான, பிரேசோவ் (Presov) பேராயர் இராட்டிஸ்லாவ் (Rastislav) அவர்களை, இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ் ஆகிய இருவரின் நற்செய்திப் பணி பற்றி எடுத்துரைத்தார். 

இவ்விரு புனிதர்களும், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளைக் கொண்ட கிறிஸ்தவ சமூகங்களுக்கிடையே பிரிவினைகள் ஏற்படாமல் இருப்பதில் வெற்றி கண்டவர்கள் என்றும், இவ்வாறு இவ்விரு புனிதர்களும், கிறிஸ்தவ ஒன்றிப்பின் உண்மையான முன்னோடிகளாக உள்ளனர் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆர்த்தடாக்ஸ் பேராயர் இராட்டிஸ்லாவ் அவர்களின் வருகை, இரு கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே, ஆன்மீகப் பிணைப்பையும், நட்பையும் வளர்க்கும் என்றும், புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ் ஆகியோரின் பரிந்துரை, நாம் முழு ஒன்றிப்பை நோக்கி நடக்க உதவும் என்றும் கூறினார், திருத்தந்தை.

கத்தோலிக்கருக்கும், ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே அமைந்துள்ள, பன்னாட்டு இறையியல் உரையாடல் குழுவில், செக் மற்றும் சுலோவாக்கிய பகுதியின், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையும் இணைந்துள்ளதற்கு நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.   

உடன்பிறப்புக்களான புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ் ஆகிய இருவரும், ஸ்லாவ் இனத்தவரின் திருத்தூதர்கள் என்றழைக்கப்படுகின்றனர். இவ்விருவரும், பைசான்டைன் வழிபாட்டுமுறை கிறிஸ்தவ இறையியலாளர்கள் மற்றும் மறைப்பணியாளர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

11/05/2018 15:17