சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

கிறிஸ்தவ சபையினர் ஒன்றிணைந்து செயல்படவேண்டியதன் அவசியம்

திருத்தந்தை பிரான்சிஸ், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை தலைவர் பேராயர் இராட்டிஸ்லாவ் அவர்கள் தலைமையிலான குழு சந்திப்பு

11/05/2018 15:30

மே,11,2018. உரோம் நகருக்கு, தங்களை வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார், செக் மற்றும் சுலோவாக்கிய பகுதியின், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை தலைவர் பேராயர் இராட்டிஸ்லாவ்.

ஆர்த்தடாக்ஸ் சபையினரும், கத்தோலிக்கரும், வரலாற்றுக் காரணங்களுக்காக, வாழ்வின் அப்பமாகிய, திருநற்கருணையை, தற்போது ஒன்றுசேர்ந்து கொண்டாட இயலாமல் இருக்கின்றனர், இருந்தபோதிலும், கிறிஸ்தவர்கள் சித்ரவதைக்கு உள்ளாகின்ற இக்காலத்தில், இச்சபையினர் ஒன்றுசேர்ந்து நடக்க வேண்டும் என்பது உணரப்படுகின்றது என்று உரையாற்றினார், பேராயர் இராட்டிஸ்லாவ்.

மத்திய கிழக்கில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் மீண்டும் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளனர், இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள், துன்புறுத்தலுக்கு அஞ்சி, சொந்த வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறுகின்றனர், அப்பகுதியில், மேலும் இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள், வறுமை, நோய், ஊட்டச்சத்துப்பற்றாக்குறை போன்றவற்றால் துன்புறுகின்றனர் என்றும், பேராயர் இராட்டிஸ்லாவ் அவர்கள், திருத்தந்தையிடம் தெரிவித்தார்.

மேலும் இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள், தங்களின் பூர்வீகம், நம்பிக்கை மற்றும் கிறிஸ்தவ விசுவாசத்தை இழந்துள்ளனர் என்றும், இவர்கள், தங்களின் தனித்துவத்தைத் தேடுவதில், பல சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறினார், பேராயர் இராட்டிஸ்லாவ்.

1155 ஆண்டுகளுக்குமுன்னர், இளவரசர் இராட்டிஸ்லாவ் அவர்களின் அழைப்பின்பேரில், புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ் ஆகிய இருவரும், தற்போதைய, செக் மற்றும் சுலோவாக்கிய பகுதிக்கு வந்தனர் என்றுரைத்த, பேராயர் இராட்டிஸ்லாவ் அவர்கள், கிறிஸ்தவரின் எதிர்காலம் குறித்த அச்சம் அகற்றப்படுவதற்கு, இப்புனிதர்களின் பரிந்துரையை இறைஞ்சுவோம் எனவும், திருத்தந்தையிடம் கூறினார். 

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை தலைவர் பேராயர் இராட்டிஸ்லாவ் அவர்கள் தலைமையிலான குழு, உரோம் நகரில் புனித இடங்களைத் தரிசித்து வருகின்றது. இச்சந்திப்பு, மே 12, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

11/05/2018 15:30