2018-05-11 15:38:00

திருத்தந்தை, ருமேனிய பிரதமர் சந்திப்பு


மே,11,2018. ருமேனிய நாட்டு பிரதமர் Viorica Dăncilă அவர்கள், இவ்வெள்ளிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார் என, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.

இச்சந்திப்புக்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறைச் செயலர் பேராயர் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும் சந்தித்தார், ருமேனிய பிரதமர் Dăncilă.

ருமேனிய நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவையின் பொதுநலப் பணிகள், 2019ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ருமேனியாவின் தலைமைத்துவம் போன்றவை, இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்தது.

இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ருமேனிய பிரதமர் Dăncilă அவர்கள், திருத்தந்தையை ருமேனியா நாட்டுக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைத்ததாகவும், திருத்தந்தை, அடுத்த ஆண்டில் ருமேனியாவிற்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளக்கூடும் எனவும் தெரிவித்தார்.

மேலும், நம் இல்லங்கள், தெருக்கள், மற்றும் பணியிடங்களில், அமைதியைக் கட்டியெழுப்பத் தொடங்குவோம் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில், இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியாயின.

மே 14, வருகிற திங்களன்று, உரோம் புனித இலாத்தரன் பசிலிக்கா சென்று, உரோம் மறைமாவட்டத்தின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலை விசுவாசிகளின் தலைவர்களைச் சந்திப்பார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் மறைமாவட்டத்தின் பங்குத்தளங்களில், தவக்காலத்தில், ஆன்மீக நோய் என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட பயிற்சியை நிறைவு செய்வதாக, திருத்தந்தையின் இச்சந்திப்பு அமையும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.