2018-05-12 16:06:00

இவ்வுலகை மாறியமைக்க உதவும் விசுவாசம்


மே.12,2018. உண்மையான விசுவாசம் என்பது, இவ்வுலகை மாற்றியமைக்கவும், உயரிய மதிப்பீடுகளை பரப்பவும், இதைவிட சிறந்த உலகை அடுத்த தலைமுறைகளுக்கு விட்டுச் செல்லவும் ஆழமான ஆவலைக் கொண்டுள்ளது, என, பெல்ஜியம் நாட்டிலிருந்து தன்னைச் சந்திக்க இச்சனிக்கிழமையன்று வந்திருந்த ‘லோஜியா’ ("Logia") என்ற அமைப்பினரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சமூகத் துறையிலும், பல்வேறு விவாதங்களிலும் கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு இடம் கொடுத்தல் என்ற நோக்கத்தில் துவக்கப்பட்ட இந்த அமைப்பின் அங்கத்தினர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் படிப்பினைகளை பின்பற்றுவது என்பது, நம் மனிதாபிமானத்தை இழக்க உதவுவதில்லை, மாறாக, மனிதாபிமானமும், சகோதரத்துவமும், நீதியும் நிறைந்த உலகை கட்டியெழுப்பவே உதவுகின்றது என கூறினார்.

இயேசுவின் நற்செய்தி  நம்மை பாவங்களிலிருந்தும், கவலைகளிலிருந்தும், உள்மன வெறுமைகளிலிருந்தும், தனிமை உணர்வுகளிலிருந்தும் விடுவித்து, யாராலும் பறிக்க முடியாத மகிழ்வை நமக்குத் தருகின்றது என்று கூறியத் திருத்தந்தை, இந்த மகிழ்வைப் பெறுவதற்கு செபிப்பதும், அருளடையாளங்களை அணுகுவதும் அவசியம் எனவும் கூறினார்.

பெல்ஜியம் நாட்டின் பிளான்டெர்ஸ் (Flanders) நகரில் துவக்கப்பட்ட 'லோஜியா' என்ற கத்தோலிக்கக் கழகம், பொருளாதாரம், மதம், கலை, அறிவியல் என்ற அனைத்து தளங்களிலும் அறிவு சார்ந்த விவாதங்களை மேற்கொண்டு வருகிறது. இந்தக் குழுவில் 150க்கும் மேற்பட்ட அறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.