2018-05-12 16:02:00

தென் ஆப்ரிக்க மசூதி தாக்குதலுக்கு ஆயர்கள் கண்டனம்


மே.12,2018. தென் ஆப்ரிக்காவின் வெருலாம் (Verulam) பகுதியில் உள்ள இஸ்லாமிய மசூதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

தென் ஆப்ரிக்க கத்தோலிக்க ஆயர்களின் சார்பில் செய்தியொன்றை வெளியிட்டுள்ள தென் ஆப்ரிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Stephen Brislin அவர்கள், இத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளது மற்றும் இருவர் படுகாயமுற்றுள்ளது குறித்து கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இமாம் ஹுசைன் மசூதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதலையும், காயமடைந்தோர் விரைவில் குணமடைவதற்கு செப உறுதியையும் வழங்குவதாக கூறியுள்ள பேராயர் Brislin அவர்கள், இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள், விரைவில், நீதியின் முன் கொணரப்பட, காவல்துறை உழைக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து பல காலமாக, மத சகிப்புத்தன்மையுடன் வாழும் தென் ஆப்ரிக்காவில், ஒரு மதத்திற்கு எதிராக இன்னொரு மதத்தைத் தூண்டிவிடும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார், தென் ஆப்ரிக்க ஆயர் பேரவைத் தலைவர்.

ஒவ்வொருவரின் உரிமைகளையும், மாண்பையும், மதிப்பதை அடிப்படையாகக் கொண்டு பெறப்படும் அமைதிக்காக தென் ஆப்ரிக்க திருஅவை தொடர்ந்து செபிக்கும் என மேலும் எடுத்துரைத்தார் பேராயர் Brislin.

வியாழனன்று பிற்பகல் உள்ளூர் நேரம் 2.30 மணியளவில் டர்பன் நகருக்கருகேயுள்ள வெருலாம் என்ற இடத்தின் இமாம் ஹுசைன் மசூதிக்குள் நுழைந்த மூன்று ஆயுதம் தாங்கிய மனிதர்கள், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த இருவரை கழுத்தில் கத்தியால் அறுத்தும், ஒருவரை வயிற்றில் கத்தியால் குத்தியும் தாக்கியுள்ளனர், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.