2018-05-14 15:42:00

இயேசுவின் நண்பர்களாய் வாழ அழைக்கப்பட்டுள்ளோம்


மே,14,2018. கிறிஸ்துவோடு நட்புணர்வு கொண்டிருப்பதே, நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடையும், அழைப்புமாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார்.

இயேசுவின் இதயத்திற்குள் நுழையும் அனுமதியையும், அவரது நட்பையும் கொடையாகப் பெற்றுள்ள நாம் ஒவ்வொருவரும், இக்கொடைக்கு இறைவன் எப்போதும் விசுவாசமாக உள்ளார் என்பதை உணர்த்திருக்கவேண்டும் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

'அன்பில் நிலைத்திருங்கள்' என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறும் சொற்களை மையமாகக் கொண்டு தன் மறையுரையைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு தன் சீடர்களை பணியாட்கள் என்று அழைக்கவில்லை, மாறாக, நண்பர்கள் எனவே அழைத்தார் என்பதைக் கூறி, தான் காட்டிக்கொடுக்கப்பட்ட வேளையிலும், யூதாசை நோக்கி, "தோழா, எதற்காக வந்தாய்?" என்றே இயேசு அவரிடம் பேசினார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

துன்ப வேளைகளில் விலகிச் செல்வது நட்பு அல்ல, ஏனெனில், நாம் பாவம் புரிந்து, இறைவனைவிட்டு விலகிச் சென்றாலும், அவர் நமக்காக என்றென்றும் காத்திருக்கிறார் என்று தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, நாம் அன்பிலும், நட்பிலும் நிலைத்திருப்பதற்குத் தேவையான வரத்தை இறைவன் நமக்கு வழங்குமாறு மன்றாடுவோம் என்று விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.