2018-05-14 16:09:00

லெபனான் நாட்டின் இளையோர் பிரதிநிதிகளுடன் கர்தினால் சாந்த்ரி


மே,14,2018. கடந்த சில நாட்களாக லெபனான் நாட்டில், மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டு வந்த கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள்,  இஞ்ஞாயிறன்று, தன் பயணத்தை நிறைவு செய்து வத்திக்கான் திரும்பினார்.

இளையோரை மையப்படுத்தி நடைபெறவிருக்கும் உலக ஆயர் மாமன்றத்தின் தயாரிப்புக் கூட்டம், உரோம் நகரில் நடைபெற்ற வேளையில், அக்கூட்டத்தில், லெபனானில் இருந்து கலந்துகொண்ட 4 இளையோர் பிரதிநிதிகளோடு, கர்தினால் சாந்த்ரி அவர்கள், இஞ்ஞாயிறன்று காலை  உணவருந்தி உரையாடினார்.

லெபனான் நட்டில் திருத்தந்தையின் திருப்பயணம் இடம்பெறவேன்டும் என்ற ஆவலை வெளியிட்டு, கடிதம் ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு கர்தினால் வழியாக அனுப்பியுள்ளனர், இந்த இளையோர்.

கடந்த கால போர்களாலும் மோதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது பற்றி இளையோரில் எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்தும், இந்த சந்தேகங்களை அகற்ற கிறிஸ்தவ விசுவாசம் எவ்விதம் உதவி வருகிறது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் இளையோர்.

லெபனான் நாட்டில் தன் மேய்ப்பணி பயணத்தின் இறுதி நாளான ஞாயிறன்று, மாரனைட் முதுபெரும் தந்தை, கர்தினால், Bechara Boutros al-Rahi அவர்களுடன் இணைந்து Harissa நமதன்னை திருத்தலத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார் கர்தினால் சாந்த்ரி.

இந்த வழிபாட்டின் இறுதியில் கர்தினால் சாந்திரி அவர்கள்,  வரும் ஜூலை மாதம் 7ம் தேதி, இத்தாலியின் பாரி நகரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்திய கிழக்கு நாடுகளின் முதுபெரும் தந்தையர்களை சந்திக்கவிருப்பதையும், இம்மாதத்தில் ஒவ்வொருவரும் செபமாலை செபிக்குமாறு சிறப்பு விண்ணப்பம் ஒன்றை விடுத்ததையும் நினைவூட்டினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.