2018-05-14 16:19:00

வன்முறை களைந்து, உடன்பிறந்த உணர்வை வளர்க்க விண்ணப்பம்


மே,14,2018. இந்தோனேசியாவின் சுரபாயா நகரில் மூன்று கிறிஸ்தவ கோவில்கள் தாக்கப்பட்டுள்ளது குறித்து தன் கவலையையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் ஆறுதலையும் இஞ்ஞாயிறன்று வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏறத்தாழ 45,000 பேர் உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருக்க, அவர்களுக்கு இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியபின், இந்தோனேசியாவின் இத்தாக்குதல்கள் குறித்து பேசியத் திருத்தந்தை, இரண்டு கிறிஸ்தவ கோவில்களும், ஒரு கத்தோலிக்கக் கோவிலும் என மூன்று கோவில்கள் தற்கொலைப் படையினரின் தாக்குதலால் சேதமாக்கப்பட்டுள்ளதும், அதில் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டுள்ளதும்  ஆழ்ந்த கவலையைத் தருவதாகத் தெரிவித்தார்.

இத்தகைய வன்முறைச் செயல்கள் நிறுத்தப்படவும், வன்முறை மற்றும் பகைமை உணர்வுகள் மாற்றப்பட்டு, மக்களின் இதயங்களில் ஒப்புரவும், உடன்பிறந்த உணர்வும் இடம்பெற வேண்டும் என செபிப்போம் எனவும் மக்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறன்று காலை இந்தோனேசியாவின் 3 கிறிஸ்தவ கோவில்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நடத்தியிருக்கலாம் எனவும், இத்தாக்குதல்களை வழிநடத்தியவர்கள்,  இந்தோனேசியாவின் தீவிரவாத இஸ்லாமிய குழு எனவும், காவல் துறையின் முதல்கட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இத்தாக்குதல்களில், இதுவரை, 13 பேர் உயிரிழந்துள்ளனர், ஏறத்தாழ 45 பேர் காயமுற்றுள்ளனர்.

இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தோனேசியாவில், 10 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.