2018-05-15 14:49:00

இமயமாகும் இளமை - மனசாட்சியின்படி மறுப்பு கூறுவோர் உலகநாள்


1919ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்த டெஸ்மண்ட் டாஸ் (Desmond Doss) என்பவர், தன் இளவயதில், அமெரிக்க இராணுவத்தில் இணைந்தார். தன் மத நம்பிக்கை மற்றும், மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுத்து, இராணுவத்தில் துப்பாக்கியைத் தொடப்போவதில்லை என்பதிலும், மற்றொரு மனிதரைக் கொல்லப்போவதில்லை என்பதிலும் அவர் மிக உறுதியாக இருந்தார். அவரது கொள்கைப் பிடிப்பினால், ஏனைய வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் ஏளனத்திற்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளானார். இருப்பினும், தன் உறுதிப்பாட்டிலிருந்து அவர் சற்றும் தளரவில்லை.

இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த வேளையில், இராணுவத்தில் மருத்துவ உதவிகள் செய்யும் பிரிவில், முழு மனதுடன் பணிபுரிந்தார், டெஸ்மண்ட் டாஸ். ஜப்பானின் ஒக்கினாவா (Okinawa) தீவில் நிகழ்ந்த மிகக் கொடூரமானப் போரில், இவரும் மற்ற வீரர்களுடன், போர்க்களத்தின் முன்னணி நிலையில் பணியாற்றினார். போர்க்களத்தில் அடிபட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தோரை, தன் தோள்களில் சுமந்து, எதிரிகளின் துப்பாக்கி குண்டுகளுக்குத் தப்பித்து, தங்கள் பகுதியில் இருந்த முகாமுக்குக் கொண்டு சென்றார் இளம் வீரர் டாஸ்.

இவ்வாறு, அவர், 75 வீரர்களின் உயிர்களைக் காப்பாற்றினார். அவரது வீரத்தையும், தியாகத்தையும் பாராட்டி, அமெரிக்க அரசுத்தலைவர், ஹாரி ட்ரூமன் (Harry Truman) அவர்களிடமிருந்து, விருதுபெற்றார்.

அரசின் கொள்கைகளும் சட்டங்களும், ஒருவரின் மனசாட்சிக்கு எதிரானதாக இருந்தால், மனசாட்சியின்படி மறுப்பு சொல்பவர்கள் பலர் உள்ளனர். இவர்களில் டெஸ்மண்ட் டாஸ் இராணுவத்தின் மிக உயரிய விருதைப் பெற்றுள்ள முதல் வீரர்.

மனசாட்சியின்படி மறுப்பு கூறுவோர் உலகநாள், (International Conscientious Objectors Day) மே 15, இச்செவ்வாய் சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.