சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

சிலே ஆயர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட முதல் சந்திப்பு

சந்தியாகோ பேராலயத்தில் சிலே ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - REUTERS

16/05/2018 15:39

மே,16,2018. "பிறரன்புப் பணிகள் இன்றி, அன்பு கிடையாது. சகோதரர், சகோதரிகளுக்கு ஆற்றும் பணி, அன்புகொண்ட உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கிறது" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

மேலும், திருத்தந்தையின் அழைப்பின்பேரில், சிலே நாட்டிலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்திருக்கும் ஆயர்களுடன் திருத்தந்தை மேற்கொண்ட முதல் சந்திப்பைக் குறித்து, திருப்பீட செய்தித்தொடர்புத் துறையின் தலைவர் கிரெக் புர்க்கே (Greg Burke) அவர்கள், இச்செவ்வாய் மாலை குறுகிய அறிக்கையொன்றை வெளியிட்டார்.

இச்செவ்வாய் மாலை, 4 மணிக்கு, சிலே நாட்டைச் சேர்ந்த 34 ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுடன் 30 நிமிடங்கள் செபத்தில் கழித்தார். பின்னர், புதன் பிற்பகல் வரை, ஆயர்கள் தனிப்பட்ட முறையில் செபிப்பதற்கு உதவியாக, திருத்தந்தை, அவர்களுக்கு, ஒரு சில தியானக் குறிப்புக்களை அளித்தார்.

திருத்தந்தைக்கும் ஆயர்களுக்கும் இடையே, மே 16, இப்புதன் மாலையில் ஒரு சந்திப்பும், மே 17, வியாழன், மேலும் இரு சந்திப்புக்களும் நிகழும் என்று, புர்க்கே அவர்களின் அறிக்கை கூறுகிறது.

சிலே நாட்டில், அருள்பணியாளர்கள், சிறுவர், சிறுமியரை, பாலியல் துன்பங்களுக்கு உள்ளாக்கியது குறித்தும், சிலே தலத்திருஅவையில் மாற்றங்களைக் கொணர்வது குறித்தும் பேசுவதற்கு, சிலே நாட்டு ஆயர்களை, திருத்தந்தை அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

16/05/2018 15:39