2018-05-16 15:10:00

இஸ்ரேல் அரசின் கட்டுப்பாடற்ற வன்முறை - எருசலேம் பேராயர்


மே,16,2018. எண்ணிக்கையின்றி தொடரும் மற்றொரு வன்முறையால், புனித பூமி மீண்டும் இரத்தம் சிந்தியுள்ளது என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை மறைமாவட்டத்தின் பேராயரும், புனித பூமியின் அப்போஸ்தலிக்க நிர்வாகியுமான Pierbattista Pizzaballa அவர்கள், மே 15, இச்செவ்வாயன்று மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மே 14, இத்திங்களன்று, எருசலேம் நகரில், அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதரகம் திறக்கப்பட்ட வேளையில், காசா பகுதியில் போராட்டங்களை மேற்கொண்ட பாலஸ்தீனியர்கள் மேல், இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், 58 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 1,500க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.

இஸ்ரேல் அரசு மேற்கொண்ட இந்த கட்டுப்பாடற்ற வன்முறையைக் குறித்து, தன் மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர், அனைவருக்கும், பேராயர் Pizzaballa அவர்கள், அனுப்பியுள்ள மடலில், தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இராணுவத்தினர் மேற்கொண்ட வரம்பு மீறிய வன்முறையால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், வளர் இளம் பருவத்தினர் என்பதை தன் மடலில் குறிப்பிட்டுப் பேசியுள்ள பேராயர் Pizzaballa அவர்கள், மனித உயிர்கள் மீது எள்ளளவும் மதிப்பு இல்லாமல் நடத்தப்படும் அனைத்து வன்முறைகளும் கண்டனத்திற்குரியன என்று கூறியுள்ளார்.

மே 19, வருகிற சனிக்கிழமை, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு முன், அந்த ஆவியார் நம் அனைவரின் உள்ளங்களையும் தன் அன்பால் பற்றியெரியச் செய்வதற்கு, ஒருநாள் செபமும், உண்ணா நோன்பும் மேற்கொள்ளவேண்டுமென்று, பேராயர் Pizzaballa அவர்கள், அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.