2018-05-16 15:26:00

பல்சமயக் கருத்தரங்கிற்கு கர்தினால் Tauran அனுப்பிய செய்தி


மே,16,2018. முற்சார்பு எண்ணங்களால் மூடப்பட்ட மனங்களை விட்டு வெளியேறி, ஒவ்வொருவரிடமும் காணப்படும் செறிவு மிகுந்த பாரம்பரியத்தை மதிப்பதற்கு, அன்பு நிறைந்த  மனநிலை தேவை என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கிற்கு செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

"தர்மமும் வார்த்தையும் - சிக்கல் நிறைந்த காலத்தில் கூட்டுறவும், உரையாடலும்" என்ற தலைப்பில் உரோம் நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Jean-Louis Tauran அவர்கள் அனுப்பியிருந்த செய்தியை, இவ்வவையின் செயலர், ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள் வாசித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், பள்ளிகளில் நிலவிய உறவுச் சூழல் தற்போது இல்லை என்பதை தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிடும் கர்தினால் Tauran அவர்கள், மாணவர்களிடையே காணப்படும் முற்சார்பு எண்ணங்களை நீக்குவதற்கு, சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பது இன்றியமையாத கடமை என்று எடுத்துரைத்தார்.

படைப்பாற்றல் மிகுந்த வழிகளில், சமுதாயங்களுக்கிடையே பாலங்களை அமைப்பது, மதத் தலைவர்களுக்கு முன் உள்ள ஒரு முக்கியமான பணி என்பதையும், கர்தினால் Tauran அவர்களின் செய்தி வலியுறுத்துகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.