2018-05-17 15:08:00

இமயமாகும் இளமை : முன்னாள் குழந்தைத் தொழிலாளரின் அசத்தல்கள்


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளவேளை, தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்புத் திட்டத்தின்கீழ் செங்கல் சூளை, பட்டாசு நிறுவனங்கள், பனியன் நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறார், பிளஸ் 2 தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்குமேல் பெற்று, மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர காத்திருக்கிறார்கள். இவ்வாறு மீட்கப்பட்ட எழுபதாயிரம் குழந்தைகளுக்காக 341 சிறப்பு மையங்கள் செயல்படுகின்றன என்று செய்திகள் கூறுகின்றன. திருப்பூர், கோவை மாவட்டங்களில், குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட எட்டு மாணவ மாணவியர் ஆயிரம் மதிப்பெண்களுக்குமேல் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இவர்கள் வறுமையின் காரணமாக, மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே பனியன் நிறுவனங்களில் வேலைக்குச் சென்றவர்கள். 2011ம் ஆண்டில் மீட்கப்பட்ட, சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த எஸ்.தரணிதரன், 1093 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை வாகன ஓட்டுனர். 2013ம் ஆண்டில், ஏழாம் வகுப்பு பயின்றபோது, வறுமை மற்றும் குடும்பச்சூழல் காரணமாக, படிப்பை நிறுத்திவிட்டு, திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியச் சென்றுள்ளார், தரணிதரன். மருத்துவராகும் கனவில் இவர் நீட் தேர்வும் எழுதியுள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மீன் சுத்தம் செய்யும் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட, சென்னை காசிமேட்டைச் சேர்ந்த அபிதா 1105 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், திருப்பூரைச் சேர்ந்த ஏ.டி.கஸ்தூரி என்ற மாணவி, 8ம் வகுப்பு படித்த போது தாயை இழந்தவர். இதனால் படிப்பை நிறுத்திவிட்டு பனியன் நிறுவனத்திற்கு வேலைச் சென்றவர். இவரது தந்தை தள்ளுவண்டிக் கடையில் பஜ்ஜி, போன்டா விற்று குடும்பத்தை நடத்தி வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.