சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வத்திக்கான் \ அறிக்கைகள்

திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் இரமதான் செய்தி

நைரோபியில் ஜாமியா மசூதியில் செபிக்கும் பெண்கள் - REUTERS

18/05/2018 15:56

மே,18,2018. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் போட்டி மனப்பான்மையை விலக்கி, ஒத்துழைப்பு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவை கூறியுள்ளது.

இரமதான் நோன்பு மாதம் மற்றும் அதைத் தொடர்ந்த Id al-Fitr விழாவை முன்னிட்டு, அனைத்து முஸ்லிம்களுக்கும் நல்வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ள போட்டி மனப்பான்மை, பொறாமை, எதிர்க்குற்றச்சாட்டுகள் பதட்டநிலைகள் போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

மதங்களுக்கு இடையே காணப்படும் போட்டிச் செயல்கள், மதங்கள் மற்றும் அவற்றைப் பின்பற்றுவோரின் பெயரைக் காயப்படுத்துகின்றன எனவும், இச்செயல்கள், மதங்கள், அமைதியின் பிறப்பிடங்கள் அல்ல, மாறாக அவை, பதட்டநிலை மற்றும் வன்முறையின் ஊற்றுகள் என்ற கண்ணோட்டத்தை வளர்க்கின்றன என்றும் அச்செய்தி எச்சரிக்கின்றது.

இந்த எதிர்மறை விளைவுகளைத் தவிர்ப்பதற்கு, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகளை ஏற்று, இவைகளுக்குப் பொதுவாக உள்ள மத மற்றும் அறநெறி விழுமியங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று அச்செய்தி அழைப்பு விடுக்கின்றது.

நாம் வழிபடும் எல்லா வல்லமையும் கொண்டவருக்குச் சான்று பகர வேண்டியதும்,  பிறரின் மதத்தையும், மத உணர்வுகளையும் மதித்து, நம் மத நம்பிக்கைகளை மற்றவரோடு பகிர்ந்து கொள்வதும், நம் எல்லாரின் உரிமையும் கடமையும் ஆகும் எனவும் கூறுகின்றது அச்செய்தி.  

எனவே, ஒருவர் ஒருவரை மதித்து, ஒன்றிணைந்து பணியாற்றுவதன் வழியாக, மேலும் அமைதியும், உடன்பிறப்பு உணர்வுகொண்ட உறவுகளும் வளரும் என்றும், இவ்வாறு, எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் மகிமையளிக்கலாம் மற்றும், பலதரப்பட்ட இன, மத, கலாச்சாரத்தைக் கொண்டதாக மாறிவரும் சமுதாயத்தில், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கலாம் என்றும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் இரமதான்  செய்தி தெரிவிக்கின்றது.   

2018ம் ஆண்டின் இரமதான் மற்றும் Id al-Fitr விழாவுக்கு, “கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் : போட்டியிலிருந்து ஒத்துழைப்பு” என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது, திருப்பீட பல்சமய உரையாடல் அவை. இச்செய்தியில், இந்த அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, அதன் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

18/05/2018 15:56