2018-05-18 16:01:00

பதட்டநிலைகளை உருவாக்கும் புதிய கூறுகள் தடைசெய்யப்பட..


மே,18,2018. ஏற்கனவே கொடூர ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில், மேலும் பதட்டநிலைகளை உருவாக்கும் புதிய கூறுகள் தடைசெய்யப்படுவதற்கு, ஞானமும், விவேகமும் அதிகமாகத் தேவைப்படுகின்றன என்று, திருப்பீடம் இவ்வெள்ளியன்று ஐ.நா.வில் கூறியுள்ளது.

கிழக்கு எருசலேம் உட்பட, இஸ்ரேலின் ஆக்ரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் மோசமாகிவரும் மனித உரிமைகள் குறித்து, ஐ.நா. மனித உரிமைகள் அவை நடத்திய 28வது சிறப்பு அமர்வில் உரையாற்றிய, திருப்பீட பிரதிநிதி பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், புனித பூமியிலும், மத்திய கிழக்கிலும் அதிகரித்துள்ள தொடர் வன்முறை குறித்த திருத்தந்தை மற்றும் திருப்பீடத்தின் கவலையைத் தெரிவித்தார்.

போர் போரையும், வன்முறை வன்முறையையும் வருவிக்கின்றது என்பதற்கு நாம் சாட்சிகளாக உள்ளோம் என்றும், அனைவராலும் அனைத்து மனித உரிமைகளும் முழுமையாய் அனுபவிக்கப்படுவதற்கு, அமைதி முக்கியமான கூறு என்றும், ஒவ்வொரு மனிதரும் அமைதியை அனுபவிக்க உரிமையைக் கொண்டுள்ளனர் என்றும் பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.

சந்திப்புகளுக்கு ஆம் எனச் சொல்வதற்கும், மோதல்களுக்கு மறுப்பு சொல்வதற்கும், கலந்துரையாடலுக்கு ஆம் எனச் சொல்வதற்கும், வன்முறைக்கு மறுப்பு சொல்வதற்கும், பேச்சுவார்த்தைக்கு ஆம் எனச் சொல்வதற்கும், மோதல்களுக்கு மறுப்பு சொல்வதற்கும், ஒப்பந்தங்களை மதிப்பதற்கு ஆம் எனச் சொல்வதற்கும் கோபமூட்டுவதற்கு மறுப்பு சொல்வதற்கும், நேர்மைக்கு ஆம் எனச் சொல்வதற்கும் வஞ்சகத்திற்கு மறுப்பு சொல்வதற்கும் திருப்பீடம் அழைப்பு விடுக்கின்றது என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.   

யூதர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர்க்கு புனிதமான எருசலேம் நகரின் ஒப்பற்ற தனித்துவம் பற்றியும் பேசிய பேராயர், காசா மற்றும் மேற்கு கரையில் இடம்பெற்ற அண்மை வன்முறைகளால் இறந்த மற்றும் காயமுற்றோருக்கு திருப்பீடத்தின் அனுதாபங்களையும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.