2018-05-19 11:51:00

இமயமாகும் இளமை - தூரத்துக் கானல்நீரை தேடி ஓடுவதா?


கடலில் பயணம் செய்துகொண்டிருந்த கப்பலொன்று தரைதட்டி நின்றது. ஒரு வாரமாக முயன்றும் கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. கப்பலில் ஓரளவு உணவு இருந்ததால், பயணிகளால் சமாளிக்க முடிந்தது. ஆயினும் அவர்களிடமிருந்த குடிநீர் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அவர்கள் தாகத்தால் துடித்தனர்.

அப்போது அவ்வழியே வந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்களிடம், "எங்களுக்குக் குடிநீர் தேவை" என்ற செய்தியை அனுப்பினார் கப்பல் தலைவர். "நீங்கள் இருக்கும் இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்துப் பருகுங்கள்" என்ற பதில் செய்தி வந்தது. கப்பல் தலைவருக்கு கடும்கோபம். கடல் நீரைக் குடிக்கச் சொல்வதற்கு இவர்கள் யார் என்று அவர் வெறுப்புடன் கீழ்த்தளத்திற்குச் சென்றார். அவர் சென்றபின், அருகிலிருந்த உதவியாட்களில் ஒருவர் தங்கள் கப்பல் நின்ற இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்தார். அந்த நீரை அவர் சுவைத்தபோது, அது சுத்தமான குடி நீர் என்பதை உணர்ந்தார். அந்தக் கப்பல் தரைதட்டி நின்ற இடம், பெரும் நதியொன்று கடலில் கலக்கும் இடம்.

சுவையான குடிநீர் சூழ்ந்திருந்த நீர்பரப்பில் நின்றுகொண்டே தாகத்தால் துடித்த கப்பல் பயணிகளைப் போல, பல இளையோர், அவர்களைச் சூழ்ந்துள்ள எத்தனையோ நன்மைகளை உணராமல், அவர்களுக்குள் புதைந்திருக்கும் கருவூலங்களை தெரிந்துகொள்ளாமல், தாகத்தால், துடிக்கின்றனர். உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் நன்மைகளைப் புரிந்துகொள்ளாமல், தொடுவானங்களை, தூரத்துக் கானல்நீரை, விலகி ஓடும் நிழல்களை இவர்கள் துரத்துவதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை வீணாக்குகின்றனர். பல நேரங்களில், இந்தப் பொய்யான மாயைகளைப் பெறுவதற்கு, அவர்களிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகின்றனர். குடும்பம், தொழில், நண்பர்கள் என்று, அவர்களைச் சூழ்ந்துள்ள நல்லவற்றை இழந்துவிட்டு,  தவிக்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.