2018-05-21 16:23:00

கிறிஸ்தவ புனிதத்துவத்தின் வரலாறு பெந்தக்கோஸ்தில் ஆரம்பம்


மே,21,2018. தூய ஆவியார் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய முப்பதாயிரம் விசுவாசிகளுக்கு, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார், புனிதத்துவத்தின் ஊற்று என்பது பற்றி பேசினார்.

பெந்தக்கோஸ்து நாளில், இயேசுவின் திருத்தூதரக்ளும், சீடர்களும் அன்னை மரியாவோடு செபத்தில் ஒன்றித்திருக்கையில், கிறிஸ்தவ புனிதத்துவத்தின் வரலாறு ஆரம்பமானது, ஏனெனில், தூய ஆவியார், புனிதத்துவத்தின் ஊற்று என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் (Gaudete et exsultate) என்ற தலைப்பில், புனித வாழ்வுக்கு அழைப்பு விடுக்கும் திருத்தூது அறிவுரையிலிருந்து மேற்கோள்காட்டிப் பேசிய திருத்தந்தை, கடவுளின் புனித மற்றும் விசுவாசமுள்ள மக்களில், தூய ஆவியார், புனிதத்துவத்தை அபரிவிதமாகப் பொழிகிறார் என்று கூறினார்.

நாம் எல்லாரும் புனிதத்துவத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் எனவும், தூய ஆவியாரின் செயல்களுக்குத் தங்களைத் திறந்து வைத்திருப்பவர்கள், பெந்தக்கோஸ்து நாளில் தொடங்கப்பட்ட புனிதத்துவப் பணியை தொடர்ந்து ஆற்றுகின்றார்கள் எனவும் கூறினார், திருத்தந்தை. நாம் புனிதத்துவத்திற்கு ஆவல்கொள்ள வேண்டுமென்றும், அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறியத் திருத்தந்தை, உலக மறைபரப்பு ஞாயிறுக்கென வெளியிடப்பட்ட செய்தி பற்றியும், இவ்வாண்டில் 175ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் பாலர் சபையின் பணிகளுக்குப் பாராட்டும் தெரிவித்தார்.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.