2018-05-23 16:42:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனிதர்களும் தப்பறைகளும்


மே,23,2018. அக்காலத்தில், திருஅவையில் ஆரியனிசம், தோனாத்தியம், பெலாஜியம், நெஸ்டோரியம், இயுதிக்கேயம் போன்ற தப்பறைக் கொள்கைகள் அவ்வப்போது பரப்பப்பட்டு கிறிஸ்தவர்களைக் குழப்பி வந்தன. இந்தக் கொள்கைகள், திருஅவையை பலவீனப்படுத்தின எனச் சொல்வதைவிட  திருஅவையை உறுதிப்படுத்தின என்றுதான் சொல்லவேண்டும். கிறிஸ்தவத்தின் மறையுண்மைகளைத் தெளிவாக எடுத்துரைக்க இவை மிகவும் வாய்ப்பளித்தன. கிறிஸ்தவர்களும், உண்மையை அறிவதற்கு மறைநூலை கவனமாகப் படித்தனர். Benjamin Warfield என்ற இறையியல் பேராசிரியர் சொன்னார் - "மீட்பு பற்றிய இரு அடிப்படையான கோட்பாடுகள் மட்டுமே உள்ளன. ஒன்று மீட்பு கடவுளிடமிருந்து வருவது. மற்றொன்று மீட்பு, மனிதரிலிருந்து வருவது. மீட்பு கடவுளிடமிருந்து வருவது என்பதே கிறிஸ்தவத்தின் பொதுவான கோட்பாடு. மீட்பு, மனிதரிலிருந்து வருவது என்பது, சிலைவழிபாட்டாளர்களிடமிருந்து வருவது" என்று. இந்தக் கூற்று திருஅவை வரலாற்றில், புனித அகுஸ்தீனார் போதனைகளைப் பின்பற்றுவோருக்கும், பெலாஜியுஸ் கொள்கைகளைப் பின்பற்றுவோருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனையாகவே இருந்து வந்தது. இறுதியில் கிறிஸ்துவின் அருளே நம்மை மீட்கின்றது என்பது ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டது.

பிரித்தானிய துறவியான பெலாஜியுஸ் என்பவர், மனிதரின் ஜென்மப் பாவ நிலையைப் புறக்கணித்தார். மனிதர், தங்களின் அறநெறி வாழ்வை மேம்படுத்துவதன் வழியாக, தங்களுக்குத் தாங்களே உதவ முடியும். மனிதரின் சொந்த முயற்சிகளால் மீட்பை அடைய முடியும். கிறிஸ்துவின் அறநெறி வாழ்வுமுறையை எடுத்துக்காட்டாகப் பின்செல்வதன் வழியாக மனிதர் தங்களை மீட்டுக்கொள்ள முடியும் எனப் போதித்தார். பெலாஜியுஸ் பொதுவாக, மனிதரின் ஜென்ம பாவத்தையும், குழந்தை திருமுழுக்கையும் புறக்கணித்தார். பெலாஜியுஸ் உரோமையில் நீண்ட காலம் தங்கி தன் கொள்கைகளைப் பரப்பினார் என்றும், இத்தாலியின் சிசிலி, வட ஆப்ரிக்கா போன்ற பகுதிகளிலும் தன் கொள்கைகளைப் பரப்பினார் என்றும் சொல்லப்படுகின்றது. அவர் காலத்தில் வாழ்ந்த புனித அகுஸ்தீன், தன் இறப்புவரை, அதாவது கி.பி.430ம் ஆண்டுவரை, பெலாஜியுசுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்துள்ளார். மனிதர் ஜென்மப் பாவத்துடன் பிறக்கின்றனர். மனிதர் தங்களையே மீட்டுக்கொள்ள முழுவதும் திறனற்றவர்கள். எனவே மீட்பு கடவுளிடமிருந்தே வருகின்றது. கடவுள் ஒருவரே மனிதருக்கு மீட்பை அருளுகின்றவர் என, புனித அகுஸ்தீனார் போதித்தார். பெலாஜியுசின் போதனைகள், கி.பி.411ம் ஆண்டில் நடந்த 15வது கார்த்தேஜ் பொதுச்சங்கத்திலும், கி.பி.418ம் ஆண்டில் நடந்த 16வது கார்த்தேஜ் பொதுச்சங்கத்திலும் கடுமையாய் கண்டனத்துக்குள்ளாகின. இருந்தபோதிலும், பெலாஜியப் போதனைகள் முற்றிலும் ஒழியவில்லை. எனவே புனித அகுஸ்தீன், தன் வாழ்வில் பெரும்பகுதியை, இக்கொள்கையை முறியடிப்பதிலே செலவழித்துள்ளார். புனித அகுஸ்தீன், முக்கியமான தொடக்ககாலத் திருஅவைத் தந்தையருள் ஒருவர் மற்றும் இறையருள் கோட்பாட்டை மிகவும் வலியுறுத்தியவர். 

நெஸ்டோரியஸ் என்பவர், (Nestorius 386-450), கி.பி.428ம் ஆண்டு கான்ஸ்தாந்திநோபிள் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். கான்ஸ்தாந்திநோபிளிலில் திறமைமிக்க அருள்பணியாளர்கள் இருக்கையில், சிரியாவைச் சேர்ந்த ஒருவர் ஆயராக வேண்டுமா என்ற விவாதம் அச்சமயத்தில் எழுந்தது. நெஸ்டோரியஸ் பதவிக்கு வந்த சில நாள்களிலே, கான்ஸ்தாந்திநோபிள் நகரில் நிலவிவந்த கிறிஸ்தியலுக்கு எதிரான ஆரியனிச ஆலயத்தைத் தகர்த்தார். ஒரு மாதம் சென்று, ஆரியனிச தப்பறைக் கொள்கைக்கு எதிராக, பேரரசர் Theodosius, அரச ஆணையிடச் செய்தார். ஆனால் ஆயர் நெஸ்டோரியஸ், இயேசு கிறிஸ்து, இறை, மனித ஆகிய இரு வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருக்கிறார். மரியா, மனித இயல்புகொண்ட இயேசுவின் அன்னை. இறை இயல்புகொண்ட இயேசுவின் அன்னை இல்லை எனப் போதித்தார். இப்போதனையை, நெஸ்டோரியசின் அதிகாரத்துக்குட்பட்ட அருள்பணியாளர்களே எதிர்த்தனர். அலெக்சாந்திரியாவின் முதுபெரும்தந்தை புனித சிரில், நெஸ்டோரயசின் போதனையை கடுமையாய் எதிர்த்தார். எகிப்தில் வாழ்ந்த எல்லாத் துறவிகளுக்கும் கடிதம் எழுதினார் புனித சிரில். நெஸ்டோரியசுக்கும் அவரே கடிதம் எழுதினார். திருத்தந்தையும், நெஸ்டோரியசுக்கு கடிதம் அனுப்பி, அவர் தனது கண்ணோட்டத்தை பத்து நாள்களுக்குள் மாற்ற வேண்டுமென ஆணையிட்டார். பின்னர், கி.பி.431ம் ஆண்டில், எபேசு பொதுச் சங்கத்தில், திருஅவை, நெஸ்டோரியசின் போதனைகளுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தது. நெஸ்டோரியசும் திருஅவையிலிருந்து விலக்கப்பட்டார். திருத்தந்தை 3ம் சிக்ஸ்துஸ் இதை உறுதி செய்தார். நெஸ்டோரியசின் பதவி பறிக்கப்பட்டு எகிப்துக்கு அனுப்பப்பட்டார்.

கான்ஸ்தாந்திநோபிள் நகரில், ஒரு துறவு இல்லத்தின் தலைவராக இருந்த இயுதிக்கேயு என்பவர், நெஸ்டோரியசின் போதனைகளைக் கண்டித்தார். அதேநேரம், இயுதிக்கேயு, இயேசுவிடம், இறை இயல்பு மட்டுமே உண்டு, மனித இயல்பு இல்லை எனப் போதித்தார். எனவே இவரும் இவரைச் சார்ந்தவர்களும் திருஅவையால் கண்டனத்துக்கு உள்ளாகினர்.

இவ்வாறு திருஅவையில் எழுந்த கோட்பாட்டுக்கு எதிரான கொள்கைகள், கிறிஸ்தவர்கள் விசுவாச உண்மைகளைப் போற்றி பாதுகாப்பதற்கு வாய்ப்பளித்தன எனச் சொல்லலாம்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.