2018-05-23 15:38:00

சீன கத்தோலிக்கருக்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு


மே,23,2018. அனைத்து கிறிஸ்தவர்களும், சீனாவில் வாழ்கின்ற அனைத்து கத்தோலிக்கருடன், ஆன்மீகமுறையில் ஒன்றித்திருக்குமாறும், சீனக் கத்தோலிக்கர், திருப்பீடத்துடன் முழு ஒன்றிப்பில் தங்கள் விசுவாசத்தை வாழ்வதற்குச் செபிக்குமாறும், இப்புதன்கிழமையன்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இப்புதன் காலையில் நடைபெற்ற பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னர், மே 24, இவ்வியாழனன்று கிறிஸ்தவர்களின் சகாய அன்னை விழா, குறிப்பாக, ஷங்கய் நகரின், Sheshan திருத்தலத்தில் வணங்கப்படும் சகாய அன்னை மரியா விழா சிறப்பிக்கப்படுவதைக் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சீனாவில் வாழ்கின்ற அனைத்து கத்தோலிக்கருடன், நாம் ஆன்மீகமுறையில் நெருக்கமாய் இருக்கவும், சீன கத்தோலிக்கர், தங்கள் விசுவாசத்தை, தாராளம் மற்றும் மனஅமைதியில் வாழவும், பேதுருவின் வழிவருபவருடன் முழு ஒன்றிப்பில் இருப்பதை, உடன்பிறப்பு உணர்வு, நல்லிணக்கம், ஒப்புரவு ஆகிய தெளிவான அடையாளங்களால் வெளிப்படுத்தவும், அவர்களுக்காகச் செபிப்பதற்கு இந்த விழா அழைப்பு விடுக்கின்றது எனக் கூறினார், திருத்தந்தை.

சீனாவிலுள்ள ஆண்டவரின் அன்புநிறை சீடர்களே, இன்னல்கள் மத்தியிலும், நீங்கள் கடவுளின் விருப்பத்திற்கு உங்களைத் தொடர்ந்து கையளிப்பதற்கு, உலகளாவிய திருஅவை உங்களோடு, உங்களுக்காகச் செபிக்கின்றது எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியா, சீன கத்தோலிக்கருக்கு உதவுவதை  ஒருபோதும் நிறுத்த மாட்டார், தாய்க்குரிய அன்போடு அவர்களை நோக்குகிறார் எனவும் கூறினார்.

மேலும், உக்ரைய்ன் நாட்டிலிருந்து, லூர்து நகருக்கு அறுபதாவது இராணுவ திருப்பயணத்தை மேற்கொண்ட திருப்பயணிகள் இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்டது பற்றிக் குறிப்பிட்டு, அவர்களுக்கு வாழ்த்துக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைய்ன் நாட்டில் போரினால் ஏற்பட்ட காயங்கள் குணமடையவும், அமைதி நிலவவும் ஆண்டவரிடம் செபிப்பதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.