2018-05-23 16:29:00

நைஜீரியாவில் நாடுதழுவிய அமைதி செப பேரணிகள்


மே,23,2018. நைஜீரியாவில், வாழ்வுக்கு ஆதரவாக, செபமாலைகளை அணிந்துகொண்டும் செபமாலை செபித்துக்கொண்டும், பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர், நாடு தழுவிய அமைதி செபப் பேரணிகளை இச்செவ்வாயன்று நடத்தியுள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் 54 நகரங்களில், பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்கர் கலந்துகொண்ட செபப் பேரணிகள், அந்நாட்டில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி கொல்லப்பட்ட 17 பொதுநிலை விசுவாசிகள் மற்றும் இரு அருள்பணியாளர்களின் நினைவாக இடம்பெற்றன. இப்பேரணிகளுக்கு விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்த நைஜீரிய ஆயர்கள், செபமாலைகள் மற்றும் மெழுகுதிரிகளுடன் மட்டுமே வரவேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

வாழ்வுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட நாடு தழுவிய இந்தச் செப பேரணிகள் பற்றி, வத்திக்கான் வானொலியில் பகிர்ந்துகொண்ட நைஜீரிய ஆயர்கள், பயங்கரவாதிகளும், வெளிநாட்டு இராணுவத்திலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள படைவீரர்களும், கால்நடைகளை மேய்க்கும் நாடோடிகளைத் தூண்டிவிட்டு, இக்கொலைகளை நடத்தியுள்ளனர் என்று கருத்து தெரிவித்தனர்.

ஆலயத்தின்மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களை, கொடூர, காட்டுமிராண்டித்தனமான மற்றும் சாத்தானியத் தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், பட்டப்பகலில் இத்தகைய மரணத் தாக்குதலை எப்படி நடத்த முடியும் என்பதை சிந்திக்கவே இயலவில்லை எனக் கூறினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.