2018-05-24 16:21:00

71வது உலக நலவாழ்வு அவையில் பேராயர் யுர்க்கோவிச்


மே,24,2018. அனைத்து மக்களின் நலவாழ்வை முன்னேற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில், சுற்றுச்சூழலுக்கும், நலவாழ்வுக்கும் இடையேயுள்ள தொடர்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. கூட்டம் ஒன்றில் வலியுறுத்தினார்.

ஜெனீவாவில் நடைபெற்ற 71வது உலக நலவாழ்வு அவையில், இப்புதன்கிழமையன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், உலகளாவிய நலவாழ்வை முன்னேற்றுவதில், உலக நலவாழ்வு நிறுவனம் எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவித்தார்.

இக்காலத்தில், சுற்றுச்சூழல் மாற்றங்களும், கடும் காலநிலைகளும், பல நாடுகளில் நலிந்த மக்களை மிகவும் பாதித்து, தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களை வருவிக்கின்றன எனவும் கவலை தெரிவித்தார், பேராயர் யுர்க்கோவிச்.

தவிர்த்திருக்கக்கூடிய சுற்றுச்சூழல் நிகழ்வுகளால், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு கோடியே 30 இலட்சம் பேர் இறக்கின்றனர், இது உலகளவில் மக்களைத் தாக்கும் நோய்களில் 25 விழுக்காட்டுக்கு காரணம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுகேடுகளால் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 65 இலட்சம் பேர் இறக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார், பேராயர் யுர்க்கோவிச்.

நலவாழ்வை மேம்படுத்துவதில் அரசியல் ரீதியாக, உறுதியான ஆர்வம் அவசியம் என்பதை அனைவரும் அறிந்துள்ளோம் என்றுரைத்த பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி வருவதையும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.