2018-05-24 15:29:00

இமயமாகும் இளமை : மதத்தைக் கடந்து இளைஞரின் மனிதநேயம்


உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தர்காசி பகுதியில் வாழ்ந்துவரும் அஜய்பிஜ்லாவன் என்பவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். டெஹ்ராடனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு, இரத்தத்தில் தட்டணுக்கள் குறைவாக இருப்பதாகவும், உடனே இரத்தம் அளிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே அஜயின் இரத்தவகையை குறிப்பிட்டு உடனடியாக இரத்தம் தேவை என்று மருத்துவமனை நிர்வாகம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தியது. இதையடுத்து, தகவல் அறிந்த ஆரிப்கான் என்ற முஸ்லிம் இளைஞர், உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு இரத்தம் கொடுக்க முன்வந்தார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து ஆரிப்கானை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உணவு சாப்பிட்ட பின்னர்தான் இரத்தம் எடுக்க முடியும் என்று கூறிவிட்டனர். ரம்ஜான் நோன்பில் இருந்த ஆரிப்கான் அவர்கள், ஓர் உயிரை காப்பாற்றுவதற்காக தனது நோன்பை பாதியில் முடித்துக்கொண்டு இரத்ததானம் செய்துள்ளார். மதத்தைக் கடந்த, முஸ்லிம் இளைஞர் ஆரிப்கான் அவர்களின் இந்த மனிதநேயச் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இரமதான் மாதத்தில், இஸ்லாமியர்கள், அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் நோன்பை ஆரம்பித்து, மாலையில் சூரியன் மறைவுக்குப்பின்தான் எதுவும் சாப்பிடுவார்கள் எனச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : newstm.in/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.