2018-05-24 16:30:00

கொரிய நாடுகளில் ஒப்புரவு, ஒன்றிணைப்பில் நம்பிக்கை


மே,24,2018. வட மற்றும் தென் கொரிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையே, கடந்த ஏப்ரல் 27ம் தேதி நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்போடு தொடங்கியுள்ள, இவ்விரு நாடுகளுக்கு இடையேயான அமைதி நடவடிக்கைகள், மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன என்று, கொரியாவின் புதிய திருப்பீடத் தூதர் கூறினார்.

தென் கொரியா மற்றும் மங்கோலியாவின் புதிய திருப்பீடத் தூதராகப் பணியேற்பதற்கு, மே 27, வருகிற ஞாயிறன்று சோல் நகருக்குச் செல்லும் பேராயர் Alfred Xuereb அவர்கள், இவ்வியாழன் காலையில் திருத்தந்தையோடு திருப்பலி நிறைவேற்றிய பின்னர், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு கூறினார்.

இரு கொரிய நாடுகளும் செல்ல வேண்டிய பாதை நீண்டது எனவும், இந்நாடுகள் பல்வேறு தடைகளை வெற்றி காண வேண்டும் எனவும் உரைத்த பேராயர் Xuereb அவர்கள், இந்நாடுகளில் அமைதியை உருவாக்குவதற்குப் பொறுப்பான குழுக்களுக்கு திருஅவை முழுவதும் ஆதரவு வழங்குமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்திருப்பதையும் குறிப்பிட்டார்.

கடந்த 23 ஆண்டுகளாக, தென் கொரிய கத்தோலிக்க திருஅவை, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சோல் நகரின் பேராலயத்தில் கூடி, இரு நாடுகளின் ஒன்றிணைப்புக்காகச் செபித்து வருகின்றதெனவும், அன்னை மரியா தம் கொரியப் பிள்ளைகளின் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்ப்பார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார், 59 வயது நிரம்பிய பேராயர் Xuereb.

1945ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்து, கொரியாவில் அதன் 35 வருட காலனி ஆதிக்கத்தை முடித்துக்கொண்டது. அதையடுத்து, கொரிய தீபகற்பத்திலும் பிரிவினை ஏற்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.