2018-05-24 16:14:00

சீன கத்தோலிக்கருக்காக, உலக அமைதிக்காக திருத்தந்தை செபம்


மே,24,2018. சீனாவின் ஷேஷான் (Sheshan) கிறிஸ்தவர்களின் சகாய அன்னை விழாவாகிய மே 24, இவ்வியாழனன்று, சீனாவிலுள்ள நம் கத்தோலிக்க சகோதரர், சகோதரிகளுடன் செபத்தில் ஒன்றித்திருப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை மரியா விழாவைக் கொண்டாடும் சீனாவிலுள்ள நம் கத்தோலிக்கருக்காகச் செபிப்போம் என, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னரும், உலகின் அனைத்து கிறிஸ்தவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆயர்கள் திருத்தந்தையை சந்திக்கும் அத் லிமினாவை முன்னிட்டு, பங்களாதேஷ் நாட்டின் டாக்கா கர்தினால் பேட்ரிக் டி ரொசாரியோ அவர்கள் தலைமையில், அந்நாட்டின் ஒன்பது ஆயர்கள், இவ்வியாழன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இன்னும், இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னர், இளையோர், நோயாளர்கள், வயது முதிர்ந்தோர் மற்றும் புதிதாகத் திருமணமானோரை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில், உலகின் அமைதிக்காக செபமாலை செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

நம் ஆண்டவர் திருஅவைக்கும், உலகம் முழுவதற்கும் அமைதி மற்றும் இரக்கத்தை அருளுமாறு, அன்னை மரியின் பரிந்துரையை இறைஞ்சுவோம் எனவும் திருத்தந்தை கூறினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.