2018-05-25 15:25:00

திருத்தந்தை : திருமணத்தில் கடவுளின் சாயல் உள்ளது


மே,25,2018. தம்பதியரின் வாழ்விலும், குடும்பத்திலும் இன்னல்கள் இருப்பது உண்மையெனினும், நாம் எப்போதும் திருமணத்தின் அழகை நோக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமையன்று மறையுரையாற்றினார்.

இயேசுவை சோதிப்பதற்காக, பரிசேயர் அவரிடம், கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா என்று கேட்டதற்கு, இயேசு கூறிய பதிலைக் கொண்டுள்ள, மாற்கு எழுதிய நற்செய்தி வாசகம் பற்றிய சிந்தனைகளை மறையுரையில் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளி காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் வாசிக்கப்பட்ட இந்நற்செய்தி வாசகத்தை விளக்கிய திருத்தந்தை,  திருமணத்தின் அழகை மையப்படுத்தி உரையாற்றினார். அத்துடன், இத்திருப்பலியில் கலந்துகொண்டவர்களில், தங்களின் திருமண பொன்விழா மற்றும் வெள்ளி விழாவைக் கொண்டாடிய ஏழு தம்பதியரின் பகிர்வுகளுக்கும் செவிமடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

விசுவாச வாழ்வை, ஒருவரால் முடியும் அல்லது முடியாது என்பதோடு குறைத்துக்கொள்ள இயலாது, ஏனெனில் கிறிஸ்தவ வாழ்வு, கடவுள் வகுத்தபடி அமைவது என்றும், விசுவாசம், துல்லியமாக, திட்டவட்டமானதாக இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

பரிசேயர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு பதில் கூறுகையில், திருமண முறிவு பிரச்சனை பற்றிக் கூறாமல், தம்பதியரின் அழகு பற்றி அவர் கூறினார் என்றும், இந்தப் பரிசேயர்கள் போன்று, முறையா, முறையில்லையா என்ற, திருமணத்தைப் பிரிக்கின்ற கேள்வியில் ஆழ்ந்துவிடாமல், நேர்மறைச் சிந்தனைகளோடு திருமணத்தை நோக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

திருமண வாழ்வில் குழந்தைகளுடன் பிரச்சனைகள் இருக்கின்றன, அதே தம்பதியருடன் விவாதங்களும், சண்டைகளும் நடக்கின்றன, ஆயினும், கணவனும் மனைவியும் ஒரே உடலாய் இருக்கின்றனர், அவர்களால் பிரச்சனைகளை மேற்கொள்ள முடியும், திருமணம், தம்பதியர்க்கு மட்டுமல்ல, திருஅவைக்கும் அருளடையாளம் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமணம் மற்றும் குடும்ப வாழ்வில் பொறுமை என்ற பண்பு மிகவும் முக்கியமானது என்று மறையுரையில் கூறியத் திருத்தந்தை, திருமணத்தில் கடவுளின் சாயலும், உருவும் உள்ளது என்பதை நாம் எல்லாரும் புரிந்துகொண்டு தியானிக்க, ஆண்டவரிடம் அருளை மன்றாடுவோம் என்று கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.